ஆர்ச்சர்ட் ரோட்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடந்த சண்டையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியை, கன்கார்ட் ஹோட்டல் மற்றும் கடைத்தொகுதியில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
21 வயது ஏஆர் ரித்வான் அப்துல் ரஹிம், சம்பவ நாளன்று காலை 6 மணியளவில் ரொட்டி நறுக்க உதவும் கத்தியை அவ்வாறு மறைத்து வைத்தார்.
முகம்மது ஷாருல்நிஸாம் ஒஸ்மான் எனும் 30 வயது ஆடவரின் கத்தி அது. அதைப் பயன்படுத்தி ஷாருல்நிஸாம் வேறோர் ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
ரித்வான்மீது திங்கட்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனையில் இருந்து ஷாருல்நிஸாமைத் தப்புவிக்கும் நோக்கில் ஆதாரத்தை மறைத்து வைத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ரித்வான்மீதான வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியதாக ஷாருல்நிஸாம்மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
30 செ.மீ. நீளம்கொண்ட ரொட்டி நறுக்கும் கத்தியால் விஷ்ணு சூரியமூர்த்தி எனும் 27 வயது ஆடவரின் மார்பில் அவர் தாக்கியதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒரு கும்பலால் தாக்கப்பட்ட முகமது இஸ்ராட் முகமது இஸ்மாயில் எனும் ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைத் தாக்கிய கும்பலில் விஷ்ணுவும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
ஆபத்து விளைவிக்கும் ஆயுதத்துடன் சண்டையில் ஈடுபட்டது தொடர்பில் விஷ்ணு மீதும் அவரது கும்பலைச் சேர்ந்தோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரான அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாரன் எனும் 29 வயது ஆடவர், கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். இதுவரை 10க்கு மேற்பட்ட ஆடவர்கள்மீது இச்சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஸ்வேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஷாருல்நிஸாமுக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட தண்டனையோ விதிக்கப்படலாம்.
ஆயுதமேந்தி சண்டையில் ஈடுபட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.