மூத்த குடிமக்கள் மறுசுழற்சிக்கு பொருள்களை வழங்க எளிதாக்க புதிய திட்டம் குவீன்ஸ்டவுனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் மதுபான ஆலைகளின் சிங்கப்பூர் பிரிவு, ‘ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி’, ‘லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்’ ஆகிய அமைப்புகள் இணைந்து ‘ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி’யின் ‘இணைந்து மறுசுழற்சி செய்வோம்’ என்ற செயல்திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 23 அன்று இம்முயற்சியைத் தொடங்கின.
இத்திட்டத்தின்கீழ், இரு வாரத்துக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் குவீன்ஸ்டவுன், மெய் லிங் ஸ்திரீட் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று தொண்டூழியர்கள் மறுசுழற்சிப் பொருள்களைச் சேகரிப்பார்கள்.
அடுக்குமாடி வீடுகளின்கீழ் உள்ள மறுசுழற்சிப் பெட்டிகளுக்கு செல்ல சிரமப்படும் முதியோருக்கு இது உதவியாக இருக்கும். 11 தொகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 முதியோர் இதன்வழி பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்’, ஆசிய பசிபிக் மதுபான ஆலைகளின் சிங்கப்பூர் பிரிவு, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இத்தொண்டூழியப் பணியில் ஈடுபடுகின்றனர்.
தொண்டூழியர்கள் தாங்கள் திரட்டும் மறுசுழற்சிப் பொருள்களை சேகரிப்பு இடங்களில் குவிப்பர். பின்னர், நெகிழிப் பொருள்கள், பளிங்குப் பொருள்கள், காகிதம், அட்டைகள், உலோகங்கள், முதலானவற்றை தனித்தனியாகப் பிரிப்பர்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய, கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவா சுற்றுப்புறத்தைப் பராமரிப்பதும், மூத்தோரைப் பேணிக் காப்பதும் சிங்கப்பூரின் இரு முக்கிய குறிக்கோள்கள் என்றார்.
முதியோரை வீட்டில் மறுசுழற்சி செய்வதில் ஈடுபடுத்தி சுற்றுப்புறத்தைக் கட்டிக்காக்க வழிவகுக்கும் இத்திட்டம் இரு நோக்கங்களையும் பூர்த்திசெய்கிறது என்றார் அவர்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளிவிவரங்களின்படி, வீட்டில் மறுசுழற்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் 2022ல் ஆகக் குறைவாக 12 விழுக்காட்டிற்கு இறங்கியது. தேசிய பசுமைத் திட்டத்தின் இலக்கு 2030க்குள் வீட்டில் மறுசுழற்சி விகிதத்தை 30 விழுக்காடாக அதிகரிப்பது.
நிகழ்ச்சியின் மற்றொரு அங்கமாக தொண்டூழியர்களின் உதவியோடு முதியோர், மறுசுழற்சி பொருள்கள் சேகரிப்பு இடங்களின் அடையாளப் பலகைகளை போத்தல் மூடிகள், ஒலிவட்டுகள் போன்ற மறுபயன்பாட்டுப் பொருள்களைக் கொண்டு அலங்கரித்தனர்.

“சுற்றுப்புறத்தைக் காக்கும் வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அனைவராலும் ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியும். உணவுக் கழிவுகளையும் மறுசுழற்சிக்கான பொருள்களையும் பிரித்து வைப்பதிலிருந்து தொடங்கலாம்,” என்றார் ‘ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி’ யின் பங்காளித்துவ முயற்சிகளுக்கான இணை இயக்குநர் திரு லயனல் துரை.
