ஃபார்முலா ஒன் (எஃப்1) கார்ப் பந்தயங்களால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றத்தை 2028ஆம் ஆண்டுக்குள் பாதியாக்கும் இலக்கை அதன் ஏற்பாட்டாளர்கள் கொண்டுள்ளனர். எஃப்1 பந்தயங்களை ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிராண்ட் பிரி (சிங்கப்பூர் ஜிபி) அமைப்பு அதற்கான திட்டத்தை வரைந்துள்ளது.
எஃப்1 பந்தயத்தை நடத்துவதற்குத் தேவைப்படும் எரிசக்திதான் 96.1 விழுக்காடு கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற எஃப்1 பந்தயத்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.
அதைத் தொடர்ந்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கான திட்டம் வரையப்பட்டுள்ளது.
இலக்கை அடைய பல்வேறு முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இவ்வாண்டு நடப்புக்கு வந்தன.
மரினா பே வட்டாரத்தில் அமைந்துள்ள எஃப்1 பந்தயப் பாதை முழுவதும் எல்இடி ரக விளக்குகளைப் பயன்படுத்துவது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று. அதோடு, ஜூலை மாதம் எஃப்1 பிட் கட்டடத்தின் மேல் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.
அந்த சூரிய சக்தித் தகடுகள், ஒரு மாத காலம் நடக்கும் எஃப்1 நிகழ்ச்சிகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் என்று சிங்கப்பூர் ஜிபி தெரிவித்தது.
ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை எஃப்1 பந்தயத்துக்காக எழுப்பப்படும் கட்டமைப்புகள் 2,372 டன்கள் அளவு கரியமில வாயுவை வெளியேற்றுவது ஆய்வில் தெரிய வந்தது. இதில் பந்தயத்தில் பங்கேற்கும் குழுக்களின் பயணம், தளவாடம் உள்ளிட்டவற்றின் தொடர்பான அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படவில்லை. ஒப்புநோக்க சிங்கப்பூரில் ஒரு தனிநபர் ஆண்டுதோறும் சராசரியாக 8,310 கிலோகிராம் அளவு கரியமில வாயுவை வெளியேற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க எஃப்1 வட்டாரத்தில் இருக்கும் மின்சார உற்பத்திக் கருவிகளில் (ஜெனரேட்டர்) பி100 பையோடீசல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிங்கப்பூர் ஜிபி திட்டமிட்டுள்ளது.

