பேருந்தைப் பிடிக்க அவசரமாக ஓடியபோது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்குக் காயம் விளைவித்த பாதசாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்தைப் பிடிக்கச் சென்றபோது சில மீட்டர் தொலைவில் மோட்டார்சைக்கிளோட்டி இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் பாதசாரி தொடர்ந்து ஓடிச் சென்றிருக்கிறார்.
அப்போது பாதசாரியின் பை மோட்டார்சைக்கிளோட்டியை இடித்திருக்கிறது. அதனால் மோட்டார்சைக்கிளோட்டி, மோட்டார்சைக்கிளிலிருந்து விழ நேரிட்டது.
அவரது உடலின் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
குற்றவாளியான 48 வயது ஹு சாங்வென்னுக்கு வெள்ளிக்கிழமையன்று மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த அவர், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவுடன் நடந்துகொண்டதாக தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியன்று ஈஷூன் அவென்யூ ஒன்றில் நிகழ்ந்தது. மரக்கட்டை பொம்மைகளைச் செய்யும் கலைஞரான ஹு, அன்றிரவு 8.25 மணியளவில் மண்டாய் அவென்யுவை நோக்கிச் செல்லும் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது சம்பவம் நேர்ந்தது.

