இளமையில் வறுமை கற்றுத்தந்த கொடை உணர்வு

இளமையில் வறுமை கற்றுத்தந்த கொடை உணர்வு

2 mins read
cadc4997-d8e2-4331-bec9-7e08348b8611
உன்னுடைய சகோதரர்களைப் படிக்க வைப்பதுதான் முக்கியம். பெண்ணாகப் பிறந்துவிட்ட நீ படிக்க வேண்டும் என்றால் நீயே சம்பாதித்துப் படித்துக்கொள் என்று திருவாட்டி அண்டோனியா ஹுய் சிறுமியாக இருந்தபோது அவருடைய தந்தை கூறிவிட்டார். அதனையடுத்து ஆறு வயதிலேயே வேலை பார்த்து சம்பாதித்து படித்தவர் திருவாட்டி ஹுய். - படம்: தி பீக்

ஏழ்மை நிலையில் பிறந்து ஆறு வயதில் வேலை பார்க்கத் தொடங்கி வாழ்வில் முன்னேறி வள்ளலாக மாறிய ஒருவர் புதிய அறப்பணி நிறுவனத்தை அமைத்து அதன்மூலம் சமூகத்திற்கு உதவி வருகிறார்.

திருவாட்டி அண்டோனியா ஹுய், 65, என்ற அந்த மாது தன்னை வாழ்க்கைப் பட்டதாரி என்று வர்ணித்துக் கொண்டார்.

ஹாங்காங்கில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆறு வயதில் ஹாங்காங்கில் ஒரு தொழிற்சாலையில் ஓராண்டுக் காலம் வேலை பார்த்து தன்னையும் தன் தங்கையையும் கவனித்துக்கொண்டார். தங்கை படிக்க உதவினார். தானும் படித்தார்.

குடும்பம் ஏழ்மை என்பதால் தன்னுடைய இரண்டு புதல்வர்களையும் படிக்க வைப்பதே முக்கியமானது என்று திருவாட்டி ஹுய்யின் தந்தை முடிவு செய்தார்.

படிக்க ஆசைப்பட்டால் நீயே சம்பாதித்துப் படித்துக் கொள் என்று திருவாட்டி ஹுய்யிடம் அவரது தந்தை கூறிவிட்டார்.

திருவாட்டி ஹுய் நாள்தோறும் இரண்டு மணி நேரம் நடந்து வீட்டில் இருந்து தொழிற்சாலைக்குச் சென்று சம்பாதித்து அதை பள்ளிக்கூடத்தில் கட்டணமாகக் கட்டி படித்து வந்தார்.

இளமையில் வறுமையும் ஏழ்மையும் இதர அனுபவங்களும் என் உள்ளே கொடை உணர்வை உருவாக்கின என்றார் திருவாட்டி ஹுய்.

முன்னாள் வங்கியாளரான திருவாட்டி ஹுய், தனது கணவரான லியோனார்டோ டார்கோவுடன் சேர்ந்து ஏஎல் வெல்த் பார்ட்னர்ஸ் என்ற சொத்து நிர்வாக நிறுவனத்தை அமைத்தார்.

திருவாட்டி ஹுய் இப்போது ‘ஏஎல்டிஐ டைட்மேன் குளோபல்’ என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவின் தலைவராக இருக்கிறார்.

திருவாட்டி ஹுய் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் அவர் சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்றார்.

‘‘நன்கொடைகள் மூலம் மக்களிடம் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவக்கூடிய தேர்ச்சிகளையும் வசதிகளையும் உருவாக்குகிறேன்,’’ என்றாரவர்.

தொடக்கமாக திருவாட்டி ஹுய் பல்வேறு அறப்பணி அமைப்புகளுக்கும் $1 மில்லியன் நன்கொடை வழங்க உறுதி தெரிவித்து இருக்கிறார்.

ஆசிய சமூக அறநிறுவனம் என்ற அமைப்பில் செயல்படும் நன்கொடையாளர் ஆலோசனை நிதியம் என்ற ஓர் ஏற்பாட்டின் மூலம் பல்வேறு அறப்பணிகளுக்கும் உதவ அவர் திட்டமிடுகிறார்.

ஆசிய சமூக அறப்பணி நிறுவனம் பதிவு பெற்ற அறப்பணி அமைப்பாகும். அது வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அந்த அறப்பணி அமைப்பைத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இந்த வட்டாரத்துடன் ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் நல்ல ஆளுமையை வலியுறுத்தி வருகிறது என்றும் இவற்றின் உதவியுடன் மூலதன மேம்பாட்டிற்கு வசதிகளைச் செய்யவும் கொடைத்தன்மைக்கான மையமாகச் சேவையாற்றவும் மதிப்புமிக்கப் பணியைச் சிங்கப்பூர் ஆற்ற முடியும் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்