நீதித்துறை ஒத்துழைப்பு: இந்தியா-சிங்கப்பூர் உச்ச நீதிமன்றங்கள் உடன்பாடு

நீதித்துறை ஒத்துழைப்பு: இந்தியா-சிங்கப்பூர் உச்ச நீதிமன்றங்கள் உடன்பாடு

1 mins read
2c9877e8-3b87-471f-bef9-e6d8c469f320
திரு டி.ஒய்.சந்திரசூட் (பின்னால் நிற்போரில் இடது), திரு சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. - படம்: எஸ்ஜி கோர்ட்ஸ்/டுவிட்டர்

சிங்கப்பூரும் இந்தியாவும் நீதித்துறையில் ஒத்துழைக்க உடன்பாடு செய்துகொண்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை அவர் சந்தித்துப் பேசினார் என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் வியாழக்கிழமையன்று டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூர், இந்திய உச்ச நீதிமன்றங்களுக்கு இடையே நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்று கையெழுத்தானதாகவும் அப்பதிவு குறிப்பிட்டது.

இதனிடையே, இந்திய நீதித்துறையுடன் நட்புறவைத் தொடர சிங்கப்பூர் நீதித்துறை ஆர்வத்துடன் இருப்பதாக சிங்கப்பூர் நீதித்துறை டுவிட்டர் வழியாகக் கூறியுள்ளது.

முன்னதாக, இவ்வாண்டு பிப்ரவரியில் திரு சுந்தரேஷ் மேனன் இந்தியா சென்றிருந்தார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், இந்திய உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்