பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்தத் திட்டம்: ஆய்வு

2 mins read
3eff32e8-12b0-4d26-95dd-0f079388127d
ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 6 விழுக்காடு வரை உயர்த்தத் திட்டமிடுவதாக ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் கூறின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு உயர்த்தத் திட்டமிடுவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜூலை மாதம் நடத்தப்பட்ட அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்ட 67 விழுக்காட்டு நிறுவனங்கள், சராசரியாக ஆறு விழுக்காடு சம்பளத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க, பொருளியல் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 76 விழுக்காட்டு நிறுவனங்கள், கடந்த 12 மாதங்களில் ஊதிய உயர்வு அளித்ததாகக் கூறின.

ஆய்வில் பங்கேற்ற 32 விழுக்காட்டு நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் ஊதியத்தில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளன.

அதே வேளையில், ஒரு விழுக்காட்டு நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தன.

பெரிய நிறுவனங்களில் 88 விழுக்காட்டு நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தின. 86 விழுக்காட்டு நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் உயர்த்தவிருக்கின்றன.

சிறிய, நடுத்தர நிறுவனங்களில் 73 விழுக்காட்டு நிறுவனங்கள், கடந்த 12 மாதங்களில் ஊதிய உயர்வு அளித்தன. 62 விழுக்காட்டு நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

சென்ற ஆண்டும் ஊதியத்தை உயர்த்தி, அடுத்த ஆண்டும் உயர்த்தவிருக்கும் நிறுவனங்களின் விகிதம் 61 விழுக்காடு.

மனிதவளம், ஊதியம் தொடர்பில் சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு, ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இந்தக் கருத்தாய்வை நடத்தியது. இதில் 282 நிறுவனங்கள் கலந்துகொண்டன.

கிட்டத்தட்ட 89 விழுக்காட்டு நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களில் முழுநேர ஊழியர் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தன.

அடுத்த ஆண்டு செலவுகள் அதிகரித்து, வருவாய் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் அதிகரிக்கும் செலவு குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.

பொருளியல் சூழல் அடுத்த ஆண்டு மேம்படும் என்று 28 விழுக்காட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனால், 35 விழுக்காட்டு நிறுவனங்கள் அது மோசமடையும் என்று கருத்துரைத்துள்ளன.

ஆய்வில் கலந்துகொண்ட 61 விழுக்காட்டு நிறுவனங்கள் பணவீக்கம் கவலைக்குரிய அம்சம் என்று கூறின.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ பிங் சூன், வர்த்தகச் சூழல் வலுவிழந்தாலும் நிறுவனங்கள் நேர்மறையான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

“தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கும் தொழில்துறைகள் இருக்கும் அதே வேளையில், சிறப்பாக செய்வதை எதிர்பார்க்கும் தொழில்துறைகளும் உள்ளன. எனவே, தொழில்துறைகளின் உற்பத்தித்திறனுக்கு ஈடுகொடுக்கும் சம்பள அதிகரிப்பு முக்கியம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்