குடும்பச் சட்ட வழக்குகளில் பயன்படுத்தப்படும் சொற்கள் எளிமையாக்கப்படும். இதன்வழி பொதுமக்கள் அச்சொற்களின் பொருளை மேலும் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
குடும்ப நீதி விதிமுறைகள் 2014 பிரிவில் செய்யப்படும் முக்கியத் திருத்தங்களில் இதுபோன்ற மாற்றங்களும் அடங்கும் என்று குடும்ப நீதிமன்றங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைவழி தெரிவித்தது.
குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து விசாரணைமுறைகளுக்குமான நடைமுறைகளைக் குடும்ப நீதி விதிமுறைகள் பிரிவு வகுத்து வருகிறது.
இந்நிலையில், குடும்பச் சச்சரவுகளில் ‘சிவில் வழக்கின் விரோதத் தன்மையை மிதமாக்கும்’ நோக்கிலும் குறிப்பிட்ட புதிய சொற்கள் பயன்படுத்தப்படும் என்று குடும்ப நீதிமன்றங்கள் பேச்சாளர் தெரிவித்தார்.
மணவிலக்கு தொடர்பான நடைமுறை தொடர்பிலும் புதிய விதிமுறைகளின்கீழ் முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்படவுள்ளது. சட்டரீதியாகப் பிரிதல் தொடர்பான நடைமுறைகளும் இனி மணவிலக்கு சட்ட நடைமுறை அம்சத்தில் சேர்க்கப்படும். இதனால் கூடுதல் தம்பதியர் பலனடைவதுடன் அவர்களின் மணவாழ்க்கை தொடர்பான சச்சரவுகளையும் விரைவில் தீர்த்துக்கொள்ளலாம் என்றார் பேச்சாளர்.
புதிய விதிமுறைகள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

