எதிர்வரும் ஐநா பருவநிலை உச்சநிலை மாநாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட இருக்கிறார்.
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குக் கட்டுப்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும்.
உலகளாவிய வெப்பநிலை ஏற்கெனவே 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
எனவே, வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும். இது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் வலுவான கூட்டு முயற்சி அவசியம் என்று திருவாட்டி ஃபூ புதன்கிழமையன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநாவின் 28வது உச்சநிலை மாநாடு நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 12ஆம் தேதி வரை துபாயில் நடைபெறுகிறது.
நார்வேயின் பருவநிலை, சுற்றுப்புற அமைச்சர் எஸ்பென் பார்த்-இட்டுடன் திருவாட்டி ஃபூ பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பார்.
தொடர்புடைய செய்திகள்
ஐநா மாநாட்டில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையை இவ்விருவரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்பது இது மூன்றாவது முறையாகும்..
கிளாஸ்கோவிலும் ஹார்ம் அல் ஷேக்கிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் நிலக்கரி போன்ற படிம எரிபொருள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும்.
2050ஆம் ஆண்டுக்குள் கரிமமற்ற நிலையை எட்ட கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உலக நாடுகள் உயர் இலக்குகளை வகுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.