இரண்டு இந்தோனீசிய ஆடவர்களுக்குப் போலி சிங்கப்பூர் அடையாள அட்டைகளைப் பெற உதவிய சிங்கப்பூரருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான முகம்மது நொராஹி பின் நொமன் எனும் 48 வயது நபர், முதலில் ஓங்க்கி ஃபெப்ரியன் எனும் இந்தோனீசிய ஆடவருக்குப் போலி அடையாள அட்டையைப் பெற உதவியதாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. 28 வயது ஓங்க்கி 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார். அப்போது ஓங்க்கியிடமிருந்து 550 வெள்ளியை வாங்கிக்கொண்டு நொராஹி அவருக்குப் போலி அடையாள அட்டையை வழங்கியிருக்கிறார்.
தேவைப்படும்போது தனது நிறுவனத்திடம் காண்பிப்பதற்காக ஓங்க்கி அந்தப் போலி அடையாள அட்டையைப் பெற்றார். அவர் சிறிது காலம் நொராஹியின் வீட்டில் வசித்து வந்தார்.
14 நாள்கள் சிங்கப்பூரில் வேலை செய்த பிறகு ஓங்க்கி இந்தோனீசியா திரும்பினார்.
பின்னர் இந்தோனீசியாவைச் சேர்ந்த மற்றோர் ஆடவரான 23 வயது அஸ்ருல் முஸாகர் என்பவருடன் ஓங்க்கிக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அஸ்ருலும் சிங்கப்பூரில் வேலை செய்ய விருப்பப்பட்டார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதியன்று ஓங்க்கியும் அஸ்ருலும் சிங்கப்பூருக்கு வந்தனர். இருவரும் நொராஹியின் வீட்டுக்குச் சென்று ஆளுக்கு 200 வெள்ளியைக் கொடுத்து போலி சிங்கப்பூர் அடையாள அட்டைகளைப் பெற்றதாக குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் குறிப்பிட்டது.
தேசிய பதிவுச் சட்டத்தின்கீழ் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததற்காக முன்னதாக இவ்வாண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று ஓங்க்கி, அஸ்ருல் இருவருக்கும் ஆளுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


