சிறைவாசம் குறித்த தவறான கருத்துகள் தொடர்பில் முன்னாள் சிறைக் கைதிக்கு பொஃப்மா திருத்த உத்தரவு

சிறைவாசம் குறித்த தவறான கருத்துகள் தொடர்பில் முன்னாள் சிறைக் கைதிக்கு பொஃப்மா திருத்த உத்தரவு

2 mins read
6de7422b-310e-4e0f-818b-58d40ee33188
செப்டம்பர் 6ஆம் தேதி ‘ஸ்பாட்டிஃபை’யில் பதிவேற்றப்பட்ட வலையொளித் தொகுப்பில் ஜேம்ஸ் ராஜ் ஆரோக்கியசாமி தான் சிறையில் நடத்தப்பட்ட விதம் குறித்து சில தவறான கருத்துகளை வெளியிட்டிருந்தார். - படம்: ஸார் இஸ்மாயில்/இன்ஸ்டகிராம்

முன்னாள் சிறைக்கைதி ஜேம்ஸ் ராஜ் ஆரோக்கியசாமி தான் சிறையில் நடத்தப்பட்ட விதம் குறித்துத் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக அவருக்கு பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சும் சட்ட அமைச்சரும் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். உள்துறை அமைச்சு இத்தகவலை வெளியிட்டது.

செப்டம்பர் 6ஆம் தேதி ‘ஸ்பாட்டிஃபை’யில் பதிவேற்றப்பட்ட வலையொளித் தொகுப்பில் அவர் அவ்வாறு கருத்துரைத்திருந்தார்.

அந்த வலையொளி செப்டம்பர் 7ஆம் தேதி, ‘பிளான் பி’ எனும் உள்ளூர் நடப்பு விவகார வலையொளி நிகழ்ச்சியின் இன்ஸ்டகிராமில் மீண்டும் பதிவேற்றப்பட்டது.

‘பிளான் பி’யின் ஸ்பாட்டிஃபை, இன்ஸ்டகிராம் கணக்குகள் இரண்டிலும் திருத்தம் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதன் தொடர்பில் அளித்த விளக்கத்திற்கான இணையத் தொடர்பு முகவரியையும் அதில் வெளியிட வேண்டும்.

வலையொளித் தொகுப்பில், 2021ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த ஒரு சண்டை தொடர்பில் அதிகாரிகள் பழிவாங்கலுக்குப் பயந்து தன்மீது குற்றம் சுமத்தவில்லை என்று ஜேம்ஸ் ராஜ் கூறினார்.

மேலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இணையத் தணிக்கை விதிமுறை குறித்து எதிர்ப்பு தெரிவித்ததற்காகத் தான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு அரசாங்க அமைப்புகளின் இணையக் கட்டமைப்பை ஊடுருவியது தொடர்பான 400க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் 39 குற்றச்சாட்டுகளை மட்டும் ஒப்புக்கொள்ளும்படி தான் கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஜேம்ஸ் ராஜ் சொன்னார்.

2013ல் சிங்கப்பூர் நில ஆணையம், தற்காப்பு அமைச்சு ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகளை ஊடுருவியதாகவும் அவர் கூறினார்.

மேலும், சிறையில் இருந்தபோது தான் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அவரது கருத்துகளை நிராகரித்ததுடன் உரிய ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்