சிங்கப்பூரில் இவ்வாண்டு அதிபர் தேர்தல் நடைபெற்ற நாளில் ஓர் ஆடவர் சில தரைவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று சந்தேக நபர் சுவர்களைத் தாண்டிக் குதித்து வீடுகளுக்குள் நுழைந்து சாக்கடைவழி தப்பியோடியதாகக் கருதப்படுகிறது.
சந்தேக நபரான சீனாவைச் சேர்ந்த 35 வயது வெய் சிங்யூ, நான்கு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதர வீடுகளின் தொடர்பில் திங்கட்கிழமையன்று அவர்மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்டவற்றின் தொடர்பில் வெய்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று இரவு 8.40 மணிக்கும் 9.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வெய் வீடுகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
பாசிர் ரிஸ் பூங்காவிற்கு அருகே உள்ள தரைவீடுகளில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. வியாழக்கிழமை காலை வெய் சம்பவ இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

