தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் லீ: அதிபர் தேர்தல் ஆக்ககரமான தேர்தல்

2 mins read
3f5fbeee-dd0a-42ba-963b-4333b46cfa52
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதற்கு முன்னதாக இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்குடன் திரு தர்மன் சண்முகரத்னம் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் அண்மையில் நடந்து முடிந்த 2023 அதிபர் தேர்தல் நாட்டிற்கு ஆக்ககரமான ஒன்றாக அமைந்துள்ளது.

சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு அது நல்லதாக இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

அதிபர் பதவிக்கு முற்றிலும் தகுதிபெற்ற ஒரு வேட்பாளரை சிங்கப்பூரர்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து தேர்ந்து எடுத்ததை தேர்தல் முடிவு காட்டியது.

வாக்களிப்பு என்று வரும்போது இனம் என்பது அவ்வளவு முக்கியத்துவம் அல்லாத ஒன்றாக இப்போது ஆகி இருக்கிறது.

அதிபரின் கடமைகளையும் பணிகளையும் பற்றி மக்கள் இப்போது சிறந்த முறையில் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று திரு லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன் சண்முகரத்னம் இஸ்தானாவில் வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சிங்கப்பூரர்கள் மிகப் பொருத்தமான ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தகுதி அடிப்படையில் மிகப் பெரும்பான்மையில் சிங்கப்பூரர்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இனம் என்பது இப்போது அவ்வளவு பெரிய அம்சம் அல்ல என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.

இது ஒரு நல்ல அறிகுறி என்று அவர் கூறினார். திரு தர்மன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னுடைய பணிகளை நிறைவேற்றும் ஆற்றல், அனுபவம், செயல்திறனைக் கொண்டவர்.

அதோடு மட்டுமன்றி, சீர்தூக்கிப் பார்ப்பதில் ஆற்றல்மிக்கவர். நேர்மையில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தெரிவித்த திரு லீ, இவை எல்லாம் அதிபர் பதவிக்கு உயிர்நாடியான அம்சங்கள் என்றார்.

அதிபர் திரு தர்மன், பொதுச் சேவையில் கொண்டிருக்கும் அனுபவம் அவரைப் புதிய பொறுப்புகளை ஏற்பதற்குத் தோதானவராக ஆயத்தப்படுத்தி இருக்கிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

திரு தர்மன் 22 ஆண்டு காலம் தனது ஜூரோங் தொகுதிக்குச் சேவையாற்றி மக்களின் மனதைக் கவர்ந்தவர் என்று கூறிய திரு லீ, தேர்தலில் திட்டவட்டமான வெற்றியைச் சாதித்து இருக்கும் திரு தர்மனை பாராட்டுவதில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

எல்லாரையும் உள்ளடக்கும் சமூகத்தை சாதிப்பது என்ற இலக்கை திரு தர்மன் அறிவித்து இருக்கிறார். அரசாங்கமும் அந்த இலக்கைக் கொண்டிருக்கிறது.

முன்னாள் விளையாட்டு வீரரான திரு தர்மன், விளையாட்டுகளையும் கலைகளையும் பேணி வளர்க்க விரும்புவதாகத் தெரிவித்து உள்ளார்.

இந்தத் துறைகளில் அதிபரின் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.

நாட்டின் சேமிப்பைப் பாதுகாப்பதில் திரு தர்மன் கொண்டுள்ள ஆற்றலில் நூற்றுக்குநூறு தமக்கு நம்பிக்கை உண்டு என்று திரு லீ தெரிவித்தார்.

முன்னாள் அதிபர்களைப் போலவே அதிபர் திரு தர்மனும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உரிய அதிபராக திகழ்வார். அர்ப்பணிப்பு உணர்வோடும் தனிச்சிறப்புமிக்க வகையிலும் சிங்கப்பூருக்கு அவர் சேவையாற்றுவார் என்பது திண்ணம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்