சிங்கப்பூர் ஆயுதப்படையின் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், சக தேசிய சேவையாளர்களை ஆபாசமானமுறையில் படங்களிலும் காணொளிகளிலும் பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.
தியோ ஹோங் வெய், மின்னல்படை வீரர்கள் தங்கியிருக்கும் ஹெண்டன் முகாமில் 2019ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அப்போது அவர் ‘பிரைவேட்’ எனப்படும் அடிநிலைப் பொறுப்பில் விநியோக உதவியாளராக இருந்தார்.
தியோ 2021ல் தேசிய சேவையை நிறைவு செய்ததாகத் தற்காப்பு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
“சிங்கப்பூர் ஆயுதப்படை அதில் பணிபுரிவோரிடம் மிகவும் உயர்தரமான ஒழுக்கத்தையும் நேர்மையையும் வலியுறுத்துகிறது. குற்றம் புரிவோர் சட்டரீதியாகத் தண்டிக்கப்படுவர்,” என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
27 வயதாகும் தியோ, 2021ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் இதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 2023ல் ஆபாசக் காணொளிகள் தொடர்பில் அவர்மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்தக் குற்றச்சாட்டுகளை அக்டோபர் 26ஆம் தேதி அவர் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


