புற்றுநோய் சிகிச்சை நிறைவு; பணிக்குத் திரும்பும் லியாங் எங் ஹுவா

1 mins read
bfc2bf5b-920e-4d84-bc81-827f74f29d5e
புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா. - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா மேற்கொண்ட மூக்குப் புற்றுநோய்க்கான ‘ரேடியோதெரப்பி’ சிகிச்சை நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் நிலையத்தில் தமக்கு சிகிச்சையளித்த பிரிவுக்கு 59 வயது திரு லியாங் ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்தார். கடந்த இரு மாதங்கள் தமக்குப் பெரும் சோதனை காலமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று தமக்குப் புற்றுநோய் இருப்பதை திரு லியாங் முதன்முறையாக அறிவித்தார்.

பல மாதங்களாக அவரின் இடது காது சரியாகக் கேட்காமல் இருந்திருக்கிறது. அதனையடுத்து காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் இருக்கும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை நாடியபோது தமக்கு முதற்கட்ட மூக்குப் புற்றுநோய் இருப்பது திரு லியாங்கிற்குத் தெரிய வந்தது.

அவர் 33 ‘ரேடியோதெரப்பி’ அமர்வுகளுக்குச் சென்றிருக்கிறார். சிகிச்சை ஏழு வாரங்கள் நீடித்தது.

குறிப்புச் சொற்கள்