ஆசிய அறப்பணிக் கூட்டமைப்பிற்கு $1 பில்லியனுக்கும் அதிகத் தொகை உறுதி

ஆசிய அறப்பணிக் கூட்டமைப்பிற்கு $1 பில்லியனுக்கும் அதிகத் தொகை உறுதி

2 mins read
d0593de7-8fa1-4fe3-b9e9-4da82f2ad436
தெமாசெக் டிரஸ்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக், செப்டம்பர் 15ஆம் தேதி ஆசிய அறப்பணிக் கூட்டமைப்பின் தொடக்கம் பற்றி அறிவித்தார். - படம்: சாவ் பாவ் 
multi-img1 of 2

உலக சுற்றுச்சூழல், சமூக சவால்களைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை ஆசியா உருவாக்குவதற்காக ‘ஆசிய அறப்பணிக் கூட்டமைப்பு’ என்ற ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.

அதன்கீழ் $1 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகைக்கு உத்தரவாதம் கிடைத்து இருக்கிறது.

தெமாசெக் டிரஸ்ட் நிறுவனம் வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தது.

மூன்றாவது ஆசிய அறப்பணி உச்சநிலைக் கூட்டத்தில் அது இந்த அமைப்பைத் தொடங்கியது.

அறப்பணித் துறையில் ஆற்றல்களையும் சமூகங்களையும் பலப்படுத்துவதும் பல துறைகளின் பங்காளித்துவ உறவைப் பேணி வளர்ப்பதும் அந்த அமைப்பின் நோக்கம்.

பருவநிலை மாற்றம், உயிரியல் பன்மய இழப்பு, இயற்கை உயிர்வாழிடங்கள் துறையின் நிலை, முதியோருக்கான வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட பல சவால்களுக்குத் தீர்வு காணவேண்டிய தேவை ஆசியாவுக்கு இருக்கிறது.

ஆசிய அறப்பணி கூட்டமைப்பில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசிய பசிபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகியவற்றைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட உலகளாவிய உறுப்பினர்களும் பங்காளி நிறுவனங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதிய அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் அதன் தனிச்சிறப்புப் புரவலராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதிபர் பதவி ஏற்ற பிறகு திரு தர்மன் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அறப்பணி கூட்டமைப்பிற்கு இதுவரையில் US$777 மில்லியன் (S$1.06 பில்லியன்) உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தெமாசெக் டிரஸ்ட் நிறுவனத்தின் US$100 மில்லியன் கடப்பாடும் உள்ளடங்கும்.

அந்தப் புதிய கூட்டமைப்பு 29 திட்டங்களை அடையாளம் கண்டு இருக்கிறது. அந்தத் திட்டங்கள் மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியவை.

பருவநிலையும் இயற்கை வளமும்; எல்லாரையும் உள்ளடக்கிய, முழுமையான கல்வி முறை; உலக, பொதுச் சுகாதாரம் ஆகியவை அந்த மூன்று முக்கிய பிரிவுகளாகும்.

சுற்றுச்சூழல், சமூகத் துறைகளில் ஆக்ககரமான மாற்றங்களைச் சாதிக்கும் நோக்கத்தில் புதிய நிறுவனங்களுக்கு வழிகாட்டும் ஒரு செயல்திட்டமும் அந்த உச்சநிலைக் கூட்டத்தில் தொடங்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் 300 பேர் கலந்துகொண்டனர். அதில் அந்தப் புதிய கூட்டமைப்பும் தெமாசெக் டிரஸ்ட் நிறுவனமும் மாற்றங்களைச் சாதிப்போருக்கான ஆசிய நிலையம் ஒன்றையும் தொடங்கின.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்த நிலையம் 2024ல் திறக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்