முதன்முறையாக எஃப்1 போட்டியைக் கண்ட வெளிநாட்டு ஊழியர்கள்

முதன்முறையாக எஃப்1 போட்டியைக் கண்ட வெளிநாட்டு ஊழியர்கள்

3 mins read
8e8c6eef-568a-4b15-9248-649cea31df38
‘எஃப்1’ போட்டியைக் காண வந்த வெளிநாட்டு ஊழியர்களும் ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ தொண்டூழியர்களும். - படம்: ரவி சிங்காரம்

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50 வெளிநாட்டு ஊழியர்களை ‘எஃப்1’ இரவு கார்ப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர் ‘ஐஆர்ஆர்’ என்று அழைக்கப்படும் ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ (ItsRainingRaincoats) தொண்டூழியர்கள்.

சிங்கப்பூர் கிராண்ட் பிரி (Grand Prix) நுழைவுச் சீட்டுகளை ‘ஐஆர்ஆர்’ அமைப்புக்கு மலிவான விலையில் வழங்கியதாலும் வர்த்தக, தொழில் அமைச்சு ஆதரவளித்ததாலும் இது சாத்தியமானது.

கலாசார, சமூக, இளையர் மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் திரு ஆல்வின் டான் இம்முயற்சியின் பின்னணியில் பெரிதும் உதவினார்.

மேலும், நல்லுள்ளம் படைத்த பொதுமக்களின் நன்கொடைகளும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு, குளிர்பானங்கள், நினைவுப் பொருள்களும் வழங்க உதவின.

முதன்முறையாக ‘ஐஆர்ஆர்’ ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சுமார் 50 வெளிநாட்டு ஊழியர்கள் பதிவு செய்தனர். ஐந்து ஊழியர்களுக்கு ஒரு தொண்டூழியர் என்ற கணக்கில் பத்து தொண்டூழியர்களும் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சி, வேலை, இருப்பிடம் என்றே பொழுதைக் கழிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல ஒரு மாற்றமாக அமைந்து புத்துணர்ச்சி ஊட்டியது என்றது ‘ஐஆர்ஆர்’ அறநிறுவனம்.

“இங்கு வந்தவர்களில் ஓர் ஊழியர் சாலைகளை அமைப்பதில் பணியாற்றுபவர். அவர் அமைத்த சாலையில் இன்று எஃப்1 உந்துவண்டிகள் செல்வதைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது, அவரது முகத்தில் கண்ட சந்தோஷமே தனி,” என்றார் ‘ஐஆர்ஆர்’ நிறுவனர் தீபா சுவாமிநாதன், 51.

எஃப்1 போட்டியை நேரில் முதன்முறையாகக் கண்ட வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பரவசமடைந்தனர். தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கைத்தொலைபேசியில் அழைத்து இந்த அரிய காட்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

“வேலைப் பளுவினாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதாலும் ஏற்படும் மன உளைச்சலைப் போக்கி எங்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இம்போன்ற முயற்சிகள். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியரான அருண், 36.

“இதனை நடத்தியது எங்களுக்குப் பெரும் மனநிறைவை அளிக்கிறது,” என்றார் 2020இலிருந்து ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியராக சேவையாற்றும் வித்யா வெங்கட்.

‘ஐஆர்ஆர்’ அறநிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை உயிரியல் பூங்கா, ‘கார்டன்ஸ் பை த பே’ போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

மேலும், ‘ஐஆர்ஆர்’ பாய லேபாரில் நடத்தும் இலவச அங்காடி மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பித்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை அத்தியாவசியப் பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கைக்குட்டைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், கைத்தொலைபேசிகள் போன்றவற்றை ஊழியர்களுக்காகத் திரட்டும் நன்கொடை இயக்கங்களும் நடைபெற்றுவருகின்றன.

“நம்மில் பலருக்கும் இவை சிறு செலவுகளே; ஆனால் வெளிநாட்டு ஊழியர் ஒவ்வொரு வெள்ளியையும் பார்த்துப் பார்த்து செலவிட வேண்டும்.

“நன்கொடையாக அளிக்கப்படும் ஒவ்வொரு கைத்தொலைபேசியும் ஊழியர் தன் குடும்பத்தினருடன் பேச வழி ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மடிக்கணினியும் சுய முன்னேற்றத்திற்கான இணையப் பாடங்களை ஊழியர் பயில வழிவகுக்கிறது.”

“அதனால்தான் இந்த நன்கொடை இயக்கங்களை நடத்துகிறோம்,” என்றார் ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர் பவித்ரா கபீர், 43.

வரும் அக்டோபர் 15ஆம் தேதியன்று, ஜனவரி முதல் ஒவ்வொரு ஞாயிறும் ஆங்கிலம் கற்றுவரும் கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடித்ததற்கு சான்றிதழும் புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளும் பெறுவர்.

தீபாவளி நவம்பர் 4 அன்று சமோசாக்கள், பீட்சாக்கள் சிங்கப்பூர் முழுதும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலையிடங்களுக்கும் வசிப்பிடங்களுக்கும் தொண்டூழியர்களால் வழங்கப்படும்.

தீபாவளி முயற்சிக்கு ஆதரவளிக்க, அல்லது ஞாயிறுகளில் ஊழியர்களுக்கு ஆங்கிலப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க விரும்பினால் ‘ஐஆர்ஆர்’ இணையதளத்தில் பதியலாம்.

குறிப்புச் சொற்கள்