கோயிலில் பெண்ணை அறைந்ததாக எம்.ரவிமீது குற்றச்சாட்டு

கோயிலில் பெண்ணை அறைந்ததாக எம்.ரவிமீது குற்றச்சாட்டு

2 mins read
3e2d7928-f182-4b6f-a807-faaad90e6381
தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் எம். ரவி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.ரவி என்றழைக்கப்படும் வழக்கறிஞர் ரவி மாடசாமி, இந்து கோயிலில் ஒரு பெண்ணை அறைந்ததாகச் சொல்லப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வேண்டுமென்றே ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியது, பொது இடத்தில் முறையின்றி நடந்துகொண்டது என்று மொத்தம் இரண்டு குற்றச்சாட்டுகளும் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் 54 வயது ரவிமீது சுமத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ரவி ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. ரவி தகாத வார்த்தைகளில் கத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அதோடு, துன்புறுத்தும் நோக்குடன் ரவி, ஆலயத்தில் இருந்த வேறொரு பெண்ணை விலைமாது என்று அவர் அழைத்ததாகவும் கருதப்படுகிறது.

அதேபோல் சனிக்கிழமையன்று காலை சுமார் 11 மணிக்கு அவர் பகோடா ஸ்திரீட்டில் ஓர் ஆடவருக்கு எதிராக தமிழில் தகாத வார்த்தைகளில் எம்.ரவி கத்தியதாகவும் நம்பப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனைக்காக ரவி, சனிக்கிழமையன்று மனநலக் கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டார். செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

பொது இடத்தில் முறையின்றி நடந்துகொண்டது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக $1,000 அபராதமும் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

அத்தவற்றை மீண்டும் இழைப்போருக்கு அதிகபட்சமாக $2,000 அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

வேண்டுமென்றே ஒருவருக்குக் காயம் விளைவிப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மூன்றாண்டுச் சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

ரவிமீது ஏற்கெனவே வேறு இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இயோ சூ காங் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே ஓர் ஆடவரின் இடது கன்னத்தில் அவர் அறைந்ததாகவும் அந்த ரயில் நிலையத்தில் ரவி அலறியதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக ரவி ஐந்தாண்டுகளுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்தத் தண்டனையை அவர் தற்போது நிறைவேற்றி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்