$1.8 பி. பணமோசடி குறித்த நாடாளுமன்றக் கேள்விகளுக்கு அக்டோபர் மாதம் அமைச்சர் நிலை அறிக்கையில் பதில்

2 mins read
355c7435-5aa1-4eb3-9d12-c3041704924e
படம்: - தமிழ் முரசு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், காவல்துறை நடத்திய பணமோசடித் தடுப்பு நடவடிக்கை குறித்தும் சிங்கப்பூரின் பணமோசடித் தடுப்புக் கட்டமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளதாக உள்துறை துணையமைச்சர் சுன் சுவெலிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

$1.8 பில்லியன் பணமோசடி தொடர்பில் 32 கேள்விகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கான பதில்கள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் அமைச்சர் நிலை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அந்தக் கேள்விகளுக்குத் திங்கட்கிழமை (செப்.18) பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில அமைச்சுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் அமைந்துள்ளன.

உள்துறை அமைச்சு, சம்பந்தப்பட்ட இதர அமைச்சுகளுடன் இணைந்து அந்தக் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அமைச்சர் நிலை அறிக்கை மூலம் வழங்குவதற்கு நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்கின் அனுமதியை திருவாட்டி சுன் சுவெலிங் வேண்டினார்.

32 கேள்விகளுக்கு வாய்மொழியாக பதிலளிக்கப்படும். மேலும் 11 கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கப்படும்.

மிக அரிதாகவே கேள்விகளுக்குப் பதிலளிப்பது இவ்வாறு தள்ளிப்போடப்படும் என்று கூறிய நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ஸுல்கிஃப்லி பகருதின், இதற்கு முன்னர் எப்போது, ஓர் அமைச்சர் நிலை அறிக்கையில் இத்தனை கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது என்று தமக்கு நினைவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்துக் காவல்துறை இன்னும் விசாரித்துவருகிறது. இதன் தீவிரத்தைக் கருதியும் பொதுமக்களின் அக்கறையைக் கருத்தில்கொண்டும் நாடாளுமன்றத்தில் முழுமையற்ற அறிக்கையை வெளியிட இயலாது என்றார் அவர்.

அமைச்சர் நிலை அறிக்கை என்பது கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தரும் என்று அவர் சொன்னார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி, வெளிநாட்டினர் 10 பேர்மீது பணமோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, போலிக் கையொப்பம், கைது நடவடிக்கைக்கு உடன்படாமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.

சீனாவை பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் 31 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் தற்போது வெவ்வேறு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய கிட்டத்தட்ட $831 மில்லியன் மதிப்புள்ள 105 சொத்துகளை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்