சிங்கப்பூரின் மிகப் பெரிய சட்டவிரோத பண விவகாரத்தில் காவல்துறை தன்வசப்படுத்தி இருக்கும் சொத்துகளின் மதிப்பு $2.4 பில்லியனுக்கும் அதிகமாகி இருக்கிறது.
காவல்துறை புதன்கிழமை அந்த விவகாரம் தொடர்பிலான புதிய விவரங்களைத் தெரிவித்தது.
அந்த விவகாரம் தொடர்பில் பத்துப் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்கள், தங்களுக்குத் தொடர்புடைய வெளிநாட்டு சட்டவிரோத கும்பல்கள் திரட்டிய கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இணையச் சூதாட்டம், திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றச்செயல்கள் முதலானவை அத்தகைய குற்றச்செயல்களில் அடங்கும்.
பத்துப் பேர் கைதானதை அடுத்து தாங்கள் மேற்கொண்டும் நடவடிக்கைளை எடுத்ததாக காவல்துறை புதன்கிழமை அறிவித்தது.
அந்த நடவடிக்கைகளின்போது மேலும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சொத்துகளை விற்க முடியாதபடி, பணத்தைக் கையாள முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.
பல வங்கிக்கணக்குகளைக் காவல்துறை முடக்கியது. அந்தக் கணக்குகளில் மொத்தம் $1.127 பில்லியனுக்கும் அதிக தொகை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டுப் பணம் உள்ளிட்ட $76 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள ரொக்கம் பறிமுதலாகி இருக்கிறது.
68 தங்கக் கட்டிகள், 294 ஆடம்பரக் கைப்பைகள், 164 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், 546 நகைகள், $38 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மின்னிலக்க நாணயம், கணினிகள், கைப்பேசிகள் போன்ற 204 மின்னணுச் சாதனங்கள் பறிமுதலான இதர பொருள்களில் உள்ளடங்கும்.
110க்கும் மேற்பட்ட சொத்துகளை விற்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
62 வாகனங்களுக்கும் இத்தகைய தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு $1.242 பில்லியன்.
காவல்துறை, ஆகஸ்ட் 15ஆம் தேதி பெரிய அளவில் நாடு முழுவதும் சோதனை நடத்தியது. வர்த்தக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிங்கப்பூரின் பல இடங்களிலும் இருக்கும் விலையுயர்ந்த கூட்டுரிமை வீடுகள், தரமிக்க பங்களாக்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
ஒன்பது ஆடவர்களும் ஒரு மாதும் கைதானார்கள்.
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கியது, தில்லுமுல்லு, அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அதை எதிர்த்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் அடுத்த நாளன்று அவர்கள் மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அந்தப் 10 பேருக்கும் வயது 31 முதல் 44 வரை. அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இப்போது பல்வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
கைதானதை அடுத்து பலமுறை அவர்கள் காணொளி வழியாக நீதிமன்ற விசாரணையில் முன்னிலையாகி இருக்கிறார்கள்.
அந்த பத்துப் பேருக்கும் பிணை வழங்கக்கூடாது என்று அரசினர் தரப்பு வாதிட்டு இருக்கிறது.