சிங்கப்பூரில் ஃபெர்சி டெய்டரி சப்ளிமண்ட் புரோடக்ட், டான்டுக் ருசா குவாட் லெலாகி, மென்டாக் கேன்டி ஆகிய பொருள்கள் பல இணைய வர்த்தக வலைத்தளங்களில் விற்கப்படுகின்றன.
ஆனால் அவற்றில் தடை செய்யப்பட்ட உடல் எடை குறைப்பு மருந்து உள்ளிட்ட பாதகமான மருத்துவப் பொருள்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து அந்தப் பொருள்களை அகற்றிவிடும்படி வர்த்தக இணையத் தளங்களுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆணையம் இதன் தொடர்பில் இணைய வர்த்தகத்தள நிறுவனங்களுடன் அணுக்கமாக செயல்பட்டு வருகிறது. விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெர்சி டெய்டரி சப்ளிமண்ட் புரோடக்ட் உடல் எடைகுறைய உதவும் பொருளாக விற்கப்படுகிறது. ஆனால் அதில் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு மருந்து கலந்து இருப்பது தெரியவந்தது. மலச்சிக்கலுக்குப் பயன்படும் ஒரு மருந்தும் அதில் காணப்பட்டது.
டான்டுக் ருசா குவாட் லெலாகி, மென்டாக் கேன்டி ஆகிய இதர இரண்டு பொருள்களில் ஆண்மை குறைவுக்குச் சிகிச்சை அளிக்கப் பரிந்துரைக்கக்கூடிய மருந்து அதிக அளவில் இருந்ததும் தெரியவந்தது.
யாராவது அந்தப் பொருள்களைப் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்ற உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று ஆணையம் ஆலோசனை கூறி இருக்கிறது.

