தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மூன்கேக்’ வாங்க செயலியைப் பதிவிறக்கம் செய்ததால் $76,000 இழப்பு

1 mins read
bce3ebdd-2612-4961-886c-3426f1f62413
அந்தத் தொகையை ‘பிடிஓ’ வீடு வாங்குவதற்கான முன்பணத்திற்கும் புதுப்பிப்புப் பணிகளுக்கும் ஒதுக்கி வைத்திருந்ததாக திருவாட்டி லீ கூறினார். - படம்: ஷின் மின் நாளேடு

‘மூன்கேக்’ வாங்குவதற்காக மூன்றாம் தரப்பு செயலியைத் தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்த மாது, $76,000 பணத்தை இழந்தார்.

மோசடிக்காரர்கள் அந்தச் செயலி மூலம் அவரது கைப்பேசியின் கட்டுப்பாட்டை வசப்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்த பணம் முழுவதையும் வேறு கணக்குக்கு மாற்றி அபகரித்தனர்.

நிர்வாகியாகப் பணிபுரியும் திருவாட்டி லீ, ‘சன்‌ஷைன் கேக் ஹவுஸ்’ எனும் கடையின் முயல் வடிவ ‘மூன்கேக்’ விளம்பரத்தை செப்டம்பர் 14ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பார்த்தார். உடனே $29.90 விலைக்கு ஒரு பெட்டி வாங்க விரும்புவதாக விற்பனையாளரிடம் ஃபேஸ்புக் வாயிலாகத் தெரிவித்தார். விற்பனையாளர் அவரது கைப்பேசி எண்ணை “விநியோகிப்பாளரிடம்” கொடுத்தார்.

அந்த ‘விநியோகிப்பாளர்’, வாட்ஸ்ஆப் மூலம் திருவாட்டி லீயுடன் தொடர்புகொண்டு, மூன்றாம் தரப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொன்னார். மிகவும் பணிவாகப் பேசிய அந்த ‘விநியோகிப்பாளர்’ சொன்னபடி திருவாட்டி லீ செய்தார்.

மறுநாள் காலை, அவரால் தனது கைப்பேசியை இயக்க முடியவில்லை. உடனே அருகிலிருந்த ஏடிஎம் சாதனத்திற்குச் சென்று பார்த்தபோது, எல்லாப் பணமும் பறிபோனதை உணர்ந்தார்.

புதிய வீட்டுக்கு முன்பணம் கட்டவும் வீட்டைப் புதுப்பிக்கவும் அந்தப் பணத்தைச் சேமித்து வைத்திருந்ததாக திருவாட்டி லீ சொன்னார்.

இதுபற்றி காவல்துறையிடம் புகார் செய்திருக்கும் திருவாட்டி லீ, இழந்த பணத்தை டிபிஎஸ் வங்கியிடமிருந்து திரும்பப்பெற நினைக்கிறார். ‘வழக்கத்திற்கு மாறான’ பரிவர்த்தனைகளை டிபிஎஸ் எப்படி அனுமதித்தது என்றும் அவர் கேட்டார்.

குறிப்புச் சொற்கள்