ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிபோல், உட்கூரை திறந்து வானத்தைக் காட்டும். ஆனால், அதன்வழியே பறந்துசெல்லப்போவது வில்லனின் ராக்கெட் அல்ல, பருவநிலை பலூன்.
பாய லேபாரில் உள்ள சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையத்தின் உயர்காற்று ஆய்வகத்திலிருந்து, தினமும் இருமுறை பருவநிலை பலூன்கள் ஆகாயத்தில் விடுவிக்கப்படுகின்றன. பருவநிலை முன்னுரைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக, காலை 7.30 மணிக்கும், மாலை 6.40 மணிக்கும் பலூன்கள் விடுவிக்கப்படும்.
சுமார் 1.6 மீட்டர் அகலமும் உயரமும் கொண்ட அந்த பலூன்கள் ஒவ்வொன்றிலும், வானளவி எனும் ஒரு சிறிய கருவி இருக்கும். பலூன் உயரே செல்லும்போது, வெப்பநிலை, காற்றின் வேகம், காற்றின் திசை, ஈரத்தன்மை, காற்றழுத்தம் போன்ற முக்கிய விவரங்களை கருவி பதிவு செய்யும். பருவநிலையை ஆய்வாளர்கள் கணிப்பதற்கு இவ்விவரங்கள் தேவை.
சுமார் 35 கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்லும் அந்த பலூன்கள், சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையத்திற்குத் தொடர்ந்து தகவல் அனுப்பும் என்று வானிலை ஆய்வாளர் திருவாட்டி லியோக் பெய் யி வியாழக்கிழமை காலை பலூன் விடுவிக்கும் நிகழ்வின்போது விளக்கினார்.
அந்தத் தகவல், ஐக்கிய நாட்டு உலக வானிலை அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்துலக தரவுத்தளத்தில் பதிவேற்றப்படும்.
உலகெங்கிலும், பருவநிலை முன்னுரைப்புக்காக நூற்றுக்கணக்கான இடங்களில் பலூன்களும் வானளவி கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூர் பயன்படுத்தும் வானளவி கருவியின் மின்கலம், மூன்று முதல் நான்கு மணிநேரம் நீடிக்கக்கூடியது. அது இருக்குமிடத்தை “ஜிபிஎஸ்” மூலம் கண்டறிய முடியும்.
கருவியின் விலை $100. அது வீசக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டது. அதன் உறையும் பலூனும் மக்கும் தன்மை கொண்டவை.
தொடர்புடைய செய்திகள்
பலூன் 35 கிலோமீட்டர் உயரத்தை எட்டியவுடன் வெடித்துவிடும் என்று திருவாட்டி லியோங் தெரிவித்தார். அதற்குள் அது ஆறு முதல் எட்டு மீட்டர் அகலத்திற்கு உப்பிப் போயிருக்கும். சுமார் 85 கிராம் எடையுள்ள வானளவி கருவி, ஒரு சிறிய வான்குடையின் உதவியுடன் கீழே விழும்போதும் பருவநிலையைத் தொடர்ந்து அளக்கும்.
வானளவி கருவி அனுப்பும் தகவல்கள், பருவநிலையைக் கண்காணிப்பதற்கும் பயன்படுவதாகத் திருவாட்டி லியோங் தெரிவித்தார். சிங்கப்பூரின் வானளவி கண்காணிப்பு முறை 1953ல் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதால், ஆய்வு நிலையம் தயாரிக்கும் தரவுகள் உலக ஆய்வுச் சமூகத்தில் உயர் மதிப்பு பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.