டிமென்ஷியா பராமரிப்பு: 10ல் எழுவர் சமாளிக்கத் திணறுகின்றனர்

2 mins read
0e88abab-3923-4b91-9868-3819949351d4
சிங்கப்பூரில் தற்போது ஏறக்குறைய 92,000 பேர் டிமென்ஷியாவுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

முதுமையில் வரும் ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா) உடையோரைப் பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் (74%), தங்களுக்கு உள்ள பொறுப்புகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு வழங்குவது தொடர்பில் உணர்வுபூர்வ, மனதளவிலான சவால்கள் பெரிதாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். தங்கள் அன்புக்குரியவர்களின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைவதைச் சமாளிப்பது, நடத்தையில் மாற்றங்களைச் சமாளிப்பது உள்ளிட்டவை அத்தகைய சவால்களில் அடங்கும்.

டிமென்ஷியாவுக்கான அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவது என வரும்போது, ஆய்வில் பங்கெடுத்த ஐந்தில் ஒருவர் மட்டுமே அதைச் செய்ய தயாராக இருந்தார்.

தென்கிழக்காசியாவில் பயனீட்டாளர் ஆய்வு நிறுவனமான ‘மிலியுவ் இன்சைட்’டும் டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பும் ஜூலையில் 1,500 பேரிடம் கூட்டாக நடத்திய கருத்தாய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.

டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஃபூ, “தங்கள் அன்புக்குரியவர்களுக்கு டிமென்ஷியா இருப்பதை அறிந்தவுடன் தாங்கள் பதற்றம் அடைந்த அனுபவத்தைப் பராமரிப்பாளர்கள் பலரும் பகிர்ந்தனர்,” என்றார்.

ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் நிதிச்சுமை பெரிய சவாலாக இடம்பெறாவிட்டாலும், கூடுதல் நிதியாதரவு வழங்கப்பட்டால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுமை குறிப்பிடத்தக்க அளவு குறையும் என வலுவாக நம்புகின்றனர்.

டிமென்ஷியாவால் அவதியுறுவோரைக் கவனித்துக்கொள்வதில் கூடுதலான சிறப்புத் திட்டங்களைப் பெற பராமரிப்பாளர்கள் விரும்புவது ஆய்வில் கண்டறியப்பட்டது. பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள், இல்லத் தனிப்பட்ட பராமரிப்பு போன்றவை அத்தகைய திட்டங்களில் அடங்கும்.

டிமென்ஷியாவையும் அதன் அறிகுறிகளையும் மூன்றில் ஒருவர் அவ்வளவாக அறிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

சிங்கப்பூரில் தற்போது ஏறக்குறைய 92,000 பேர் டிமென்ஷியாவுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது. 2030க்குள் இந்த எண்ணிக்கை 152,000க்கு உயரும் என முன்னுரைக்கப்படுகிறது.

இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் போக்கும் அதிகரித்து வருவதாக அண்மை ஆண்டுகளில் உலகளாவிய தரவு காட்டியுள்ளது. முப்பது வயதுக்குப் பிறகு எந்த நேரத்திலும் டிமென்ஷியா ஏற்படக்கூடும்.

டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பு, 2021ல் ‘கேரா’ எனும் கைப்பேசிச் செயலியை அறிமுகம் செய்தது. பராமரிப்பாளர்கள் சமூகத்தின் ஒன்றுபட்ட முயற்சிகளால் பலனடைய அது வகைசெய்கிறது.

குறிப்புச் சொற்கள்