தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவியன்: பலதரப்பட்ட மக்கள் சிங்கப்பூருக்கு பலம்

3 mins read
70fcf4f6-aab7-41b6-bcb2-c9a5c5c1b4d1
அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் பேசிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

வட்டார அரசியல் உத்திகளைச் சரிவரக் கையாண்டு செழித்தோங்கும் தொழில்நுட்ப மையமாக சிங்கப்பூர் முத்திரை பதித்து வருகிறது. இது அமெரிக்காவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் ஆகப் பெரிய இரண்டு பொருளியல் நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொழில்நுட்ப ரீதியாவும் பொருளியல் ரீதியாகவும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. அப்படியிருந்தும் இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் நல்லுறவை வைத்துக்கொண்டு வருகிறது. சிங்கப்பூர் இதை எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்று வியாழக்கிழமையன்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

போட்டித்தன்மைக்கு அடிமையாகாமல் போட்டித்தன்மை மிகுந்த சூழலில் சிறந்து விளங்குவது எப்படி என்பதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துவது அதற்கு ஒரு காரணம் என்று டாக்டர் விவியன் பதிலளித்தார்.

உலகளாவிய புதிய தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டில் (குளோபல் இமர்ஜிங் டெக்னாலஜி சம்மிட்) டாக்டர் விவியன் பேசினார். அமெரிக்காவின் முன்னணி அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்நிகழ்வை ஸ்பெஷல் கொம்பெட்டிடிவ் ஸ்டடீஸ் புரோஜெக்ட் எனும் ஆய்வுக் குழு நடத்துகிறது. கூகல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எரிக் ஷ்மிட்த் இந்த ஆய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

தொழில்நுட்பத் துறையில் நிலவும் போட்டியில் வெற்றியடையும் ஆற்றல் சீனாவிடம் உள்ளது என்பது குழுவின் கருத்து. அந்த வகையில் தனது உள்நாட்டு உற்பத்தித் துறையை மேம்படுத்துமாறும் சீனாவுக்கு அனுப்பப்படும் தொழில்நுட்ப முறைகளைக் கூடுதலாக கணிகாணிக்குமாறும் ஆய்வுக் குழு அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டு வருகிறது.

“இரண்டு மாபெரும் சக்திகள் போட்டியிடும்போது போட்டித்தன்மை எழுகிறது. பல சிறிய நிறுவனங்கள் போட்டியில் ஈடுபடும்போதும் போட்டித்தன்மை தலைதூக்குகிறது. போட்டித்தன்மை தான் நாம் கருத்தில்கொள்ளவேண்டிய அம்சம். சிங்கப்பூர் அதில்தான் கவனம் செலுத்துகிறது,” என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

போட்டித்தன்மைக்கு மக்கள்தான் ஆக முக்கியமான அம்சம் என்றும் அவர் சுட்டினார்.

“அப்படியென்றால் குடிநுழைவுச் சட்டங்கள், கல்விச் சட்டங்கள், பெரியவர்களுக்கான கல்விச் சட்டங்கள் ஆகியவற்றை சரியாக வரையவேண்டும்,” என்று டாக்டர் விவியன் சொன்னார்.

உலகின் ஆகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஈர்க்க சிங்கப்பூர் எவ்வாறு அதன் குடிநுழைவுச் சட்டங்களை வரைகிறது என்பதை விவரிக்குமாறு அமைச்சரிடம் கேட்கப்பட்டது. நடைமுறைக்கு உகந்த, சீரான சட்டங்களை சிங்கப்பூர் வரைவதும் பலதரப்பட்ட, நீக்குப்போக்கான மனப்பான்மை உள்ள நம்பிக்கை கொண்ட மக்களை சிங்கப்பூர் கொண்டிருப்பதும் அதற்கான காரணங்கள் என்று டாக்டர் விவியன் விளக்கினார்.

“சிங்கப்பூர் ஒரு சிறிய, புதிதாக உருவெடுத்துள்ள நாடாக இருப்பது சாதகமாக உள்ளது. இது ஒரு பல்லின, பல மொழி தேசம். நாம் ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகளைப் பயன்படுத்துகிறோம்.

“பல மொழிகளைக் கேட்பது, பல்வேறு உணவு வகைகளை ருசிப்பது, பல கலாசார மக்களுடன் ஒன்றிணைந்துப் பழகுவது, கலாசார மற்றும் அறிவுத்திறன் அம்சங்களில் அக்கறை காட்டி அவற்றுக்குப் பங்களிப்பது ஆகியவற்றுக்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம். நம்பிக்கை மிகுந்த, நீக்குப்போக்கான மனப்பான்மை கொண்ட பலரை வரவேற்கும் மக்கள் இருப்பது உதவுகிறது,” என்று அமைச்சர் எடுத்துச்சொன்னார்.

வெளிநாட்டவர் அதிகம் வரும்போது சில வேளைகளில் சிங்கப்பூரர்களிடையே கவலைகள் எழலாம் என்பதை டாக்டர் விவியன் ஒப்புக்கொண்டார். எனினும், பலரை வரவேற்கும் அணுகுமுறையைப் பின்பற்றுவதன் முக்கியவத்தையும் சிங்கப்பூர் உணர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்