ஐஃபோன் 12லிருந்து வெளியாகும் கதிரியக்க அலைகளின் அளவு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள அளவை மீறுவதாக பிரெஞ்சு அமைப்பு ஒன்று அண்மையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து சிங்கப்பூரில் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 12 கைப்பேசிகளை விற்பதை நிறுத்துமாறும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கைப்பேசிகளை சரிசெய்யுமாறும் ஏஎன்எஃப்ஆர் எனப்படும் பிரான்சின் தேசிய ஒலி சமிக்ஞை அமைப்பு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதியன்று ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. கதிரியக்க வெளியீட்டைக் கண்காணிப்பது அந்த அமைப்பின் பொறுப்பு.
ஐஃபோன் 12 வெளியிடும் கதிரியக்க அலைகள் அளவுக்கதிகமாக இருப்பதாக வெளியான தகவலை ஆப்பிள் நிறுவனம் மறுத்தது. ஐஃபோன் 12 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
ஐஃபோன் போன்ற கதிரியக்க அலைகளை வெளியிடும் கருவிகள் சிங்கப்பூரில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் என்று தகவல் தொடர்பு , ஊடக மேம்பாட்டு ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் வெள்ளிக்கிழமையன்று அறிவித்தன. ஐஃபோன் 12 கதிரியக்க அளவு குறித்து பிரான்சிலிருந்து வெளியான தகவல்கள் குறித்து தகவல் தொடர்பு , ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.
ஐஃபோன் 12, சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டிறுதியில் விற்பனைக்கு வந்தது.