காதல் மோசடிகளில் ஈடுபட்ட கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களாக நம்பப்படும் நால்வர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இரு ஆடவர்களும் இரு மாதர்களுமான அந்த நால்வர், 32 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அந்த நால்வரும் நல்ல பணமாக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த நால்வர் கைது செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர் ஒருவர் குறைந்தது $115,000 இழக்கும் நிலை தவிர்க்கப்பட்டது.
சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், மேற்கண்ட அந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் கும்பல் குற்றச்செயல்களைப் புரிந்ததுடன் மோசடிகளிலும் ஈடுபட்டது. இவ்வாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகையின் மதிப்பு குறைந்தது $370,000ஐ எட்டியதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்ற இருவரான 41 வயது ஆடவரும் 58 வயது ஆடவரும் இந்த மாதம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்தக் கும்பலிடம் இருந்து $80,600 பெறுமானமுள்ள ரொக்கத்தையும் மின்னணுவியல் சாதனங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாக 51 வயது ஆடவர் மீதும் 50 வயது மாது மீதும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருந்தது.