இரண்டாம் உலகப் போரின் 100 கிலோ எடையுடைய வெடிகுண்டு ஒன்றை நிபுணர் குழுவினர் செவ்வாய்க்கிழமையன்று கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பின் மூலம் செயலிழக்க வைக்கப் போவதால் புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா ஆகிய வட்டாரங்களில் உள்ள ஒரு சில பகுதியினர் அன்று தங்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
அருகிலுள்ள கிரீன்ரீச் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் பாடங்களை வீட்டில் இருந்தபடி தொடர்வர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிபொருள் அகற்றல் பிரிவினர், செப்டம்பர் 26ஆம் தேதியன்று காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டு செயலிழக்க வைக்கப்பட இருப்பதாக சிங்கப்பூர் காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் புது தனியார் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்துக்கான ஒரு கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை நண்பகல் வாக்கில் தோண்டும் பணிகள் நடந்தபோது குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனே காவல் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
குண்டை வேறு இடத்திற்கு மாற்றுவது பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கலாம் என்று அதிகாரிகள் கருதுவதால் அது அந்த இடத்திலேயே செயழிலக்கச் செய்யப்படும்.
வெடிகுண்டைச் சுற்றி 200 மீட்டர் வரையிலும் காவல் அதிகாரிகள் தடுப்பு ஒன்றை வைப்பார்கள் என்றும் அந்த வட்டாரத்தில் காலை 11 மணி முதல் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்களுக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.