$265 மில்லியன் மதிப்புள்ள 18 சொத்துகளைஎன்டியுசி என்டர்பிரைஸ் விற்கிறது

$265 மில்லியன் மதிப்புள்ள 18 சொத்துகளைஎன்டியுசி என்டர்பிரைஸ் விற்கிறது

2 mins read
87033266-9cd9-412f-8ab5-0efdf88c62c1
பீஷான் பேருந்து, எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள இந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 45,000 சதுர அடி மெர்காடசுக்குச் சொந்தமானது. - படம்: கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

என்டியுசி என்டர்பிரைசின் சொத்துப் பிரிவான மெர்காடஸ் கூட்டுறவு, வீவக பேட்டைகளில் இடம்பெற்றுள்ள 18 வர்த்தகச் சொத்துகளை ஆர்ப்பாட்டமின்றி மிக அமைதியாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு $264 மில்லியன் என அறியப்படுவதாக பிஸினஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பதினெட்டு சொத்துகளின் மொத்த பரப்பளவு 170,000 சதுர அடி, இவை, வீவக கடைகளாக, கடை வீடுகளாக, அதிக உயரமில்லாத புளோக்குகளாக வெவ்வேறு வீவக பேட்டைகளில் இடம்பெற்றுள்ளன.

அனைத்தும் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

எண்பது விழுக்காடு இடங்களை ‘ஃபேர்பிரைஸ்’ குத்தகைக்கு எடுத்துள்ளது. சொத்துகளை நீண்டகாலத்திற்கு வாடகைக்கு விடுவதை நோக்கமாகக் கொண்டு ஃபேர்பிரைசுக்கு பெரும்பாலான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

புக்கிட் மேரா சென்ட்ரல், காலாங் பாரு, பீஷான், ஹவ்காங், சிராங்கூன் நார்த், ஹாலண்ட் டிரைவ், தெம்பனிஸ், பீடோக், போன விஸ்தா, கிளமெண்டி, சூவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், ஜூரோங் வெஸ்ட் போன்ற இடங்களில் சொத்துகள் அமைந்துள்ளன.

எஞ்சிய குத்தகைக் காலம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. சராசரியாக 57 ஆண்டுகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது.

பதினெட்டு சொத்துகளும் மூன்று தொகுதிகளாக விற்கப்படவிருக்கிறது.

இவற்றை வாங்க விரும்புவோர் மொத்தமாக அல்லது தனித்தனி தொகுதியாகவோ வாங்கலாம்.

இது குறித்து விளக்கமளித்த ‘எஸ்பிஆர்இ’ சொத்து விற்பனை நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான மூலதனச் சந்தையின் இயக்குநர் கிளமென்ஸ் லீ, சொத்துகளில் ஒரு பகுதியை விற்பதற்கான ஆர்வத்தை வெளியிட்டு மெர்காடஸ் ஆராய்கிறது என்றார்.

தற்போது குத்தகைக்கு உள்ள வாடகைதாரர்களுடன் சொத்துகள் விற்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

என்டியுசி சொத்துகளை விற்பதற்கு எஸ்பிஆர்இ முகவராக நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் சொத்துகளை அடிக்கடி மறுபரிசீலனை செய்வது வழக்கம் என்று மெர்காடஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்குதாரர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இதன் நோக்கம் என்றார் அவர்.

கடந்த ஒன்பது மாதங்களாக மெர்காடஸ், ஏறக்குறைய மூன்று பில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை விற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்