ஆகஸ்ட் மாத மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாகச் சரிவு

ஆகஸ்ட் மாத மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாகச் சரிவு

2 mins read
24db078a-5349-4aad-b27d-228b03140e88
சிங்கப்பூரில் அடுத்த சில மாதங்களில் மூலாதாரப் பணவீக்கம் மேலும் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாத மூலாதாரப் பணவீக்க விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.

சேவைத் துறை, உணவு, சில்லறை விற்பனை உள்ளிட்ட பொருள்களின் விலை சிறிதளவே உயர்ந்தது அதற்குக் காரணம்.

2023ஆம் ஆண்டின் இறுதியில் பணவீக்க விகிதம் மிதமடையக்கூடும் என்ற பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அது அமைந்திருந்தது.

தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவு ஆகியவற்றைத் தவிர்த்து, சிங்கப்பூர் குடும்பங்களின் செலவினத்தைக் குறிக்கும் மூலாதாரப் பணவீக்கம் ஆகஸ்ட்டில் 3.4 விழுக்காடு ஆனது. ஜூலை மாதம் அது 3.8 விழுக்காடாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த பயனீட்டாளர் விலைக் குறியீடும் குறைந்து 4 விழுக்காடு ஆனது. ஜூலையில் அது 4.1% ஆக இருந்தது.

சிங்கப்பூரில் அடுத்த சில மாதங்களில் மூலாதாரப் பணவீக்கம் மேலும் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட பொருள்களை இறக்குமதி செய்வதற்கான கட்டணம் குறைந்திருப்பதும் உள்ளூர் வேலைச் சந்தை சற்றே சீரடைந்திருப்பதும் அதற்குக் காரணம்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கார்களுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால் தனியார் போக்குவரத்து தொடர்பான பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கூடுதலான வீடுகள் வாடகைக்கு விடப்படுவதால் அடுத்த சில மாதங்களில் தங்குமிடம் தொடர்பான பணவீக்கம் தணியக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஆகஸ்ட்டில் தனியார் போக்குவரத்துக்கான பணவீக்கம் 6.3 விழுக்காடு உயர்ந்தது. ஒப்புநோக்க ஜூலையில் அது 4.8 விழுக்காடாக இருந்தது.

தொடர்ந்து குறைந்துவரும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் ஆகஸ்ட்டில் 1.4 விழுக்காடு குறைந்தன.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் 2023க்கான ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைத்துள்ளன. மூலாதாரப் பணவீக்க விகிதம் 3.5 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்