அப்பர் புக்கிட் தீமாவில் செவ்வாய்க்கிழமை 100 கிலோகிராம் எடை கொண்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள கட்டடங்களின் அமைப்புமுறை பாதுகாப்பாக இருப்பதாக கட்டட, கட்டுமான ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஹேஸல் பார்க் கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தின் பொதுவான பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதம், கட்டட அமைப்புமுறை சார்ந்ததன்று என ஆணையம் விளக்கியது.
“வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக சில பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அந்நடவடிக்கைக்கு முன்னதாக சில பாதிப்புகள் ஏற்கெனவே இருந்திருக்கக்கூடும்,” என்றும் அது கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹேஸல் பார்க் கூட்டுரிமைக் குடியிருப்புக் கட்டடத்தில் சேதம் ஏற்பட்ட பகுதிகளைச் சுற்றி தடுப்புவேலிகள் போடப்பட்டிருப்பதாகவும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆணையம் விவரித்தது.
ஆணையத்தைச் சேர்ந்த 46 பொறியாளர்கள் அடங்கிய குழு, செவ்வாய்க்கிழமை ஹேஸல் பார்க் கட்டடத்தையும் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட பகுதியிலிருந்து 200 மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற கட்டடங்களையும் பரிசோதித்தது. அனைத்துக் கட்டடங்களின் அமைப்புமுறையும் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.
“சிங்கப்பூரில் உள்ள கட்டடங்களின் அமைப்புமுறை, அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொலைவில் ஏற்படும் வெடிப்பினால் ஏற்படும் தாக்கமும் அத்தகைய அதிர்வுகளில் அடங்கும்,” என்றது ஆணையம்.
“ஹேஸல் பார்க் குடியிருப்பாளர்கள், சேதத்தைக் குறித்துக்கொண்டு கட்டட நிர்வாக முகவரிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதன் பின்னர் மறுசீரமைப்புப் பணிகளை அவர்களால் மேற்கொள்ள முடியும்,” என்று ஆணையம் அறிவுறுத்தியது.
வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற கட்டடங்களில் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னரும் புளோக் 154 கங்சா சாலையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பரிசோதித்தது.
“அதன் அமைப்புமுறையில் விரிசல் எதுவும் கண்டறியப்படவில்லை. அக்கட்டடம் பாதுகாப்பாக உள்ளது,” என்று அது கூறியது.
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு தொடர்பில், ஆக அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நடவடிக்கை செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்கு முன்னர் அப்பகுதியில் வசிக்கும் 4,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு ஏறக்குறைய ஒன்பது மணி நேரம் கழித்து அவர்கள் வீடு திரும்பலாம் என செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.
ஹேஸல் பார்க் கூட்டுரிமை வீட்டுக்குத் திரும்பிய குடியிருப்பாளர்கள் சிலர், சன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டதையும் குமிழ் விளக்குகள் உடைந்திருந்ததையும் பொதுத் தாழ்வாரங்களில் மேற்கூரைப் பகுதிகள் விலகியிருந்ததையும் கண்டறிந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்கள், மின்தூக்கிக் கூடங்களின் மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதையும் சில பகுதிகள் விழுந்து கிடப்பதையும் காட்டின.

