வீவக உயர் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

வீவக உயர் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

1 mins read
f6eab90c-dc28-4b8d-84cd-c4a61f9bb671
நீதிமன்றத்தில் முன்னிலையான டான் சியாம் சுவா(வலம்), லியோங் ஹா சியே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் (வீவக) பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் மீதும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீதும் நேற்று ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றச்செயல் நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் வீவகவில் டான் சியாம் சுவா, 60, மூத்த சொத்து நிர்வாகியாகப் பணியாற்றினார்.

ஊழல் பரிவர்த்தனைக்கு துணையாக இருந்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

லியோங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் இயக்குநரான லியோங் ஹா சியே, 61, மீது ஊழல் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

2021 செப்டம்பர் 16ஆம் தேதி லியோங் தனது ஊழியர் ஒருவர் மூலமாக வீவகவுக்கு தவறான வழியைக் காட்டும் வகையில் விலைப்புள்ளி வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு டான் தூண்டுகோலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றபோது குற்றச்சாட்டை மறுத்து வழக்கை எதிர்கொள்ள விரும்புவதாக டான் தெரிவித்தார்.

டானைப் பிரதிநிதித்து எந்த வழக்கறிஞரும் முன்னிலையாக வில்லை. வீவக நடைமுறைகளைப் பின்பற்றியே இதனைச் செய்ததாக டான் கூறினார்.

இது குறித்து டான் விவரிப்பதை தடுத்து நிறுத்திய நீதிபதி, வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

லியோங்கும் தனது வழக்கறிஞர் மூலமாக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

லியோங் மீதான வழக்கும் அக்டோபர் 26ஆம் தேதி கலந்துரையாடலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. டானும் லியோங்கும் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்