காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் 31 தொலைபேசி அழைப்புகள் செய்து, பொய்யான அவசரநிலைகள் பற்றி புகாரளித்த ஆடவர்மீது வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரிலுள்ள பல்வேறு இடங்களில் தற்கொலை முயற்சிகள், கடன்முதலை அச்சுறுத்தல்கள், தீச் சம்பவங்கள், கடுமையான பாலியல் குற்றங்கள் போன்றவை நிகழ்ந்ததாக 34 வயது ஃபூ டுன் லியாங் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவர் புகாரளித்த சம்பவங்கள் எதுவும் உண்மையில் நிகழவில்லை என்று காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.
அவசரத் தொலைபேசி சேவைக்கு அச்சுறுத்தலான அல்லது ஆபாசமான அழைப்புகள் செய்ததாக ஃபூ மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆபத்தான விஷயங்கள் பற்றி பொய்த் தகவல் அளித்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட மேலும் மூன்று குற்றச்சாட்டுகளுடன், ஃபே மொத்தம் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தைச் சேர்ந்த ஃபூவின் வழக்கறிஞர்களில் ஒருவர், அவருக்கு மிதமான மனவளர்ச்சி குறைபாடு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார்.
ஃபூ இவ்வாண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கும் இடையில் அழைப்புகளை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த அழைப்புகளின் தொடர்பில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும், புகாரளிக்கப்பட்ட சம்பவங்கள் உண்மையல்ல என்பதை உறுதி செய்தனர்.
ஃபூ தனது அடையாளத்தை மறைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பது, போலியான அடையாள விவரங்களைக் கொடுப்பது போன்றவை அதில் உள்ளடங்கின.
பிடோக் காவல்துறை பிரிவு தீவிர புலனாய்வுக்குப் பிறகு செப்டம்பர் 18ஆம் தேதி அவரைக் கைது செய்தது.
தொடர்புடைய செய்திகள்
ஃபூ இவ்வாண்டு ஜனவரி மாதம் மெரிடைம் ஸ்குவேர் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து, ஒரு பெண்ணைப் படமெடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, 27 வயது சல்விந்தர் கோர் என்ற பெண்மீதும் பொய்த் தகவல் அளித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி, கோர் காவல்துறையுடன் இருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பாசிர் ரிஸ் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒரு நண்பர் தற்கொலை முயற்சி செய்வதாகத் தெரிவித்தார். ஆனால், அது உண்மையல்ல. காவல்துறையினர் செப்டம்பர் 16ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.
ஃபூ மீதான வழக்கு அக்டோபர் 12ஆம் தேதியும், கோர் மீதான வழக்கு அக்டோபர் 19ஆம் தேதியும் நீதிமன்றத்தில் தொடரும்.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், “999” எண்ணுக்கு சராசரியாக ஒரு நாளில் 5,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவற்றில் சுமார் 4,000 அழைப்புகள் கைப்பேசிகளிலிருந்து வந்த மௌனமான அழைப்புகள். இவற்றுக்குப் பதிலளிக்கச் செலவாகும் நேரத்தால், உண்மையான அவசரநிலை அழைப்புகளுக்குப் பதிலளிக்க கூடுதல் நேரமெடுக்கிறது.


