தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உருமாறும் குவீன்ஸ்டவுன்

2 mins read
41d68e74-07f2-4896-a688-b2f29f2093c6
மறுவடிவம் காணவுள்ள குவீன்ஸ்டவுன். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

அடுத்த ஐந்திலிருந்து 10 ஆண்டுகளில் குவீன்ஸ்டவுன் வட்டாரம் உருமாறும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது. புதிய பூங்காக்கள், உடற்பயிற்சிப் பாதைகள், மன அமைதிக்கான தோட்டங்கள் (தெரப்பியூட்டிக் கார்டன்ஸ்) போன்ற வசதிகள் இந்த வட்டாரத்தில் அமையும் என்று வீவக சனிக்கிழமையன்று கூறியது.

மேலும், தங்ளின் ஹால்ட் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள சில புளோக்குகளை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆராய்வர் என்றும் வீவக குறிப்பிட்டது. அந்த புளோக்குகளைத் தற்போது செயல்பாட்டில் இல்லாத சிங்கப்பூர் மேம்பாட்டு அறநிதி (சிங்கப்பூர் இம்புரூவ்மென்ட் டிரஸ்ட்) கட்டின.

மேல்விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

தங்ளின் ஹால்ட்டில் 31 குடியிருப்பு புளோக்குகள், ஏழு வர்த்தக புளோக்குகள், இரண்டு உணவங்காடிச் சந்தைகள் ஆகியவற்றை 2024ஆம் ஆண்டுக்குள் இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (செர்ஸ்) இந்நடவடிக்கை 2021ஆம் ஆண்டு தொடங்கியது.

இதற்கிடையே, தங்ளின் ஹால்ட் கஸ்கேடியா எனும் தேவைக்கேற்பக் கட்டப்படும் குடியிருப்புத் திட்டம் (பிடிஓ) குவீன்ஸ்டவுனில் தொடங்கப்படும். குவீன்ஸ்டவுன் உறுமாற்றுத் திட்டம் தொடர்பான கண்காட்சி ஒன்றில் இந்த விவரம் தெரிய வந்தது.

இந்தக் குடியிருப்புத் திட்டம் அக்டோபர் மாதம் தொடங்கப்படும். இதில் மொத்தம் 970 மூன்றறை, நான்கறை வீடுகள் இருக்கும்.

நமது குடியிருப்பு வட்டாரங்களை மறுவடிமைப்போம் (ரீமேக்கிங் அவர் ஹார்ட்லேண்ட்ஸ்) திட்டத்தின்கீழ் குவீன்ஸ்டவுன் வட்டாரம் உருமாற்றப்படுகிறது. அத்திட்டத்தின் நான்காம் அங்கமாக அங் மோ கியோ, புக்கிட் மேரா, சுவா சூ காங், குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்கள் உருமாற்றம் காண்கின்றன.

வீடு, மரபு, இயற்கை ஆகியவையே குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்கள் ஆக முக்கியமாகப் பார்க்கும் அம்சங்கள் என்று வீவக சொன்னது. குவீன்ஸ்டவுனின் வரலாற்றுச் சிறப்பு, பசுமைச் சூழல் போன்றவற்றை எண்ணி குடியிருப்பாளர்கள் பெருமைப்படுவதாக வீவக குறிப்பிட்டது.

“எல்லா வயதுப் பிரிவினரும் விரும்பும் நவீன வசதிகளுக்கும் பலர் வேண்டுகோள் விடுத்தனர். நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோருடன் ஒன்றுகூடி இளைப்பாறத் தோதான இடங்கள், பசுமையான சூழல் ஆகியவற்றையும் அவர்கள் விரும்புகின்றனர்,” என்று வீவக தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்