இவ்வாண்டு ஜூன் மாதம் கப்பலிலிருந்து விழுந்து காணாமற்போன சிங்கப்பூர் படகோட்டி ஒருவர் அநேகமாக உயிருடன் இருக்கமாட்டார் என்று அமெரிக்க கரையோரக் காவல்படைக் கூறியதென காணாமற்போனவரின் சகோதரி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று சரக்குக் கப்பல் ஒன்றிலிருந்து 25 வயது முகம்மது ஃபுர்க்கான் முகம்மது ரஷித் விழுந்தார். அச்சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலக் கடற்கரைப் பகுதிக்கு அருகே நிகழ்ந்தது.
இது குறித்து அமெரிக்க கரையோரக் காவல்படையின் அதிகாரத்துவ அறிக்கைக்காகத் தனது குடும்பம் காத்திருப்பதாக திரு ஃபுர்க்கானின் சகோதரி நூர் அஃபிஃபா முகம்மது ரஷித் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
“அறிக்கை விரைவில் எங்களிடம் வழங்கப்படும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அப்போதுதான் எங்கள் குடும்பத்திற்கு விடைகள் கிடைக்கும், இந்த விவகாரத்தின் தொடர்பில் கூடுதல் தெளிவு பிறக்கும்,” என்று சகோதரி கூறினார்.
கப்பல் அதிகாரியாவதற்காக (ஜூனியர் டெக் ஆஃபிசர்) திரு ஃபுர்க்கான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என அவரின் நண்பர் முகம்மது ஃபாரிஸ் முன்னதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

