சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை அமைப்பு முதல் முறையாக நச்சு நிரல் தடுப்புச் செயலிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கைப்பேசியில் பாதுகாப்பு மிரட்டல்கள் அதிகமாகி வருகின்றன. இந்தச் சூழலில் திருட்டு மென்பொருள், போலியான மின்னஞ்சல்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்து அவற்றைத் தவிர்த்துவிடக்கூடிய வசதிகளுடன் அந்தச் செயலிகள் இருக்கின்றன.
இந்த முகவை ஆகப் புதிய தேசிய இயக்கம் ஒன்றை சனிக்கிழமை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நச்சு நிரல் தடுப்புச் செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
பரிந்துரைக்கப்பட்டு உள்ள செயலிகளையும் மோசடிகளைத் தடுக்க உதவும் ஸ்கேம்ஷீல்டு செயலியையும் விவேகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த இயக்கம் பொதுமக்களுக்கு ஊக்கமூட்டுகிறது.
அதோடு, இரண்டு அம்ச பாதுகாப்பு ஏற்பாட்டையும் மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ரகசியக் குறியீடுகளையும் பயன்படுத்தி வரும்படி அது பொதுமக்களை வலியுறுத்தி இருக்கிறது.
போலியான மின்னஞ்சல்கள் குறித்து மக்கள் விழிப்போடு இருந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு மென்பொருள்களை அப்போதைக்கு அப்போது புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் இயக்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை, ஆன்ட்ராய்டு, ஆப்பிள் சாதனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு நச்சு நிரல் செயலிகளைப் பரிந்துரைத்து அவற்றைப் பட்டியலிட்டு இருக்கிறது.
அத்தகைய செயலிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பணம் செலுத்தி வாங்கி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சன்டெக் சிட்டி மாநாட்டு நிலையத்தில் நடந்த தேசிய இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார்.
எந்தெந்த நச்சு நிரல் தடுப்புச் செயலிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதை புதிதாக வெளியிடப்பட்டு இருக்கும் பட்டியல் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
கைப்பேசியாக இருந்தாலும் கணினியாக இருந்தாலும் அவற்றை நச்சு நிரல் தடுப்பு மென்பொருளைக் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் இன்னமும் பலர் இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சுட்டினார்.
இதனிடையே, நச்சு நிரல் தடுப்புச் செயலிகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கும் அமைப்பு, தான் வெளியிட்டு உள்ள செயலிகள் மட்டுமே நூற்றுக்கு நூறு முழு பாதுகாப்பையும் வழங்கிவிட இயலாது என்றும் தெரிவித்தது. ஆகையால், எப்போதுமே பொதுமக்கள் விழிப்புடன் இருந்துவர வேண்டும் என்பதை அது நினைவூட்டியது.
சன்டெக் சிட்டியில் சனிக்கிழமை தொடங்கிய சிங்கப்பூரின் தேசிய இணையப் பாதுகாப்பு இயக்கம் ‘கண்ணுக்குத் தெரியாத விரோதி’ என்ற கருப்பொருளுடன், சாலைக்காட்சியுடன் தொடங்கியது.
அந்தச் சாலைக் காட்சியில் பேசிய சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையின் தலைமை நிர்வாகி டேவிட் கோ, குற்றவாளிகள் புதுப்புது உத்திகளுடன் செயல்படுவார்கள். ஆகையால், அவர்களுக்கு இடம் தராமல் நல்ல இணையப் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முக்கியமானது என்றார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை வெளியிட்டு உள்ள பாதுகாப்புமிக்க ஏழு நச்சு நிரல் தடுப்புச் செயலிகள்:
Android
Avast Antivirus and Security – free
AVG Antivirus and Security – free
Kaspersky Antivirus and VPN – paid
Lookout Security and Antivirus – paid
McAfee Security: VPN Antivirus – paid
Mobile Security and Antivirus (Trend Micro) – paid
Norton360 Antivirus and Security – paid
iOS
Avast Security and Privacy – free
AVG Mobile Security – free
Kaspersky: VPN and Antivirus – paid
Lookout - Mobile Data Security – paid
McAfee Security: Privacy and VPN – paid
Norton360 Security and VPN – paid
TM Mobile Security – paid