சாதனை அளவாக 851 மாணவர்களுக்கு சிண்டாவின் உன்னத விருது

சாதனை அளவாக 851 மாணவர்களுக்கு சிண்டாவின் உன்னத விருது

3 mins read
8d20e474-6812-4d85-b8e5-f773eeed1059
உச்ச தேர்ச்சி பெற்ற கு.சுதர்ஷினி (வலக்கோடியில்), தம் பெற்றோருடன். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 2

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு சிண்டாவின் உன்னத விருது பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 97 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு விருது பெற்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது, மாணவர்களின் வெற்றிக்கு ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மட்டுமில்லாமல், இந்தியச் சமூகத்தினர் இதைத் தொடர்ந்து பெற உத்வேகத்துடன் இருக்க வேண்டும் என திரு அன்பரசு கேட்டுக்கொண்டார்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 32வது விருது விழாவில் இம்முறை சாதனை அளவாக 851 மாணவர்கள் உன்னத விருதைப் பெற்றனர். விருது தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆக அதிக எண்ணிக்கை. இதன் காரணமாக விருது விழா இரு அமர்வுகளில் நடைபெற்றது. விருது பெற்றவர்களில் கிட்டத்தட்ட 12 விழுக்காட்டினர் இதற்கு முன்பு சிண்டாவின் திட்டங்களில் பங்குகொண்டவர்கள்.

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் முதல் உள்ளூர், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் வரை 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ‘ஓ’ நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான பிரிவில் விருதுபெற்றவர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பைவிட 265 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றில் சிறந்த தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு சிண்டா ஆண்டுதோறும் இவ்விருதை வழங்கி வருகிறது. விருது பெற்றவர்கள் $150 முதல் $500 வரை பெற்றுக்கொண்டனர். விருது விழாவின் முதல் அமர்வில் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் கலந்துகொண்டார்.

“இந்திய சமூகத்தில் மாணவர்கள் காணும் அமோக வளர்ச்சி பாராட்டத்தக்கது. கல்விக்கு அப்பாற்பட்டு அவர்கள் சமூக சேவையிலும் ஈடுபடுகின்றனர். இந்திய மாணவர்களுக்காக சிண்டா நடத்தும் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.

இரண்டாவது அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, “மாணவர்கள் தங்களின் வளர்ச்சியை கல்வியோடு நிறுத்திவிடாமல் அதையும் தாண்டி செயல்பட வேண்டும். இலக்கு நிர்ணயித்து புதிய தகவல்களை அறிய வேண்டும். சமூகத்துக்கு தொண்டாற்றுவதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார்.

சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி, “முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாடு நடப்பில் இருக்கும் நிலையில், மாணவர்களால் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடங்களை தேர்ந்தெடுத்து கல்வியில் சிறப்பாகச் செய்ய முடியும். பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் பலர் இன்று விருது பெறுவதன் மூலம், பலதுறைத் தொழிற்கல்லூரி கல்விப் பாதை மாணவர்களுக்கிடையே பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது,” என்றார்.

விருது பெற்றவர்களில் ஒருவரான கு.சுதர்ஷினி, 24, அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் மற்றும் உளவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். உச்ச தேர்ச்சி பெற்ற அவர், கல்வியில் நாட்டமின்றி தனது நேரத்தை வலைப்பந்தாட்டத்தில் செலவிட்டு வந்தார். விளையாட்டின்போது முட்டியில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவரது கவனம் கல்வியின் பக்கம் திரும்பியது. தற்போது டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவில் அவர் பணியாற்றுகிறார்.

குறிப்புச் சொற்கள்