சுவா சூ காங்கில் 1,900 பிடிஓ வீடுகள் விரைவில் விற்பனை

2 mins read
6aba0b52-0d3d-4c69-a671-7d4c7ed9659a
சுவா சூ காங்கில் ரயில் கிரீன் 1, ரயில் கிரீன் II என்ற இரண்டு வீட்டுத் திட்டங்களில் 12 புளோக்குகள் இருக்கும். அவை 13 மாடி முதல் 31 மாடிவரை உயரத்தில் கட்டப்படும். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

சுவா சூ காங்கில் இரண்டு கட்டுமானத் திட்டங்களில் கட்டப்படும் சுமார் 1,900 பிடிஓ அடுக்குமாடி வீடுகள் இந்த மாதத் தொடக்கத்தில் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.

அந்த வீடுகளில் குடியேற காத்திருப்புக் காலம் நான்கு ஆண்டுகள். அந்த வீடுகளின் நெடுகே அவற்றின் வழியாக ரயில் வழித்தடம் செல்லும்.

சுவா சூ காங்கில் ரயில் கிரீன் 1, ரயில் கிரீன் II என்ற அந்த இரண்டு வீட்டுத் திட்டங்களில் 12 புளோக்குகள் இருக்கும். அவை 13 மாடி முதல் 31 மாடிவரை உயரமாகக் கட்டப்படும்.

ஐந்தறை வீடுகள் மூன்று தலைமுறை வீடுகள் போன்ற பெரிய வீடுகளை வாங்கலாம்.

ரயில் கிரீன் 1, திட்டத்தில் 870க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படும். அவற்றில் குடியேற மூன்றே கால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வரவிருக்கின்ற வீடு விற்பனை களில் இவைதான் சீக்கிரமாக கைக்குக் கிடைக்கும் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இந்த விவரங்களைச் சனிக்கிழமை தெரிவித்தது.

சுவா சூ காங்கில் கட்டப்படும் புதிய வீடுகள் அந்த வட்டாரத்தின் வரலாற்றை நினைவில் கொள்ளும் வகையில் ரயில்வே கருப்பொருளுடன் கூடியவையாக இருக்கும்.

கடந்த 1903 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கேடிஎம் ரயில் சேவை சுவா சூ காங் வழியாக 2011 வரை இயங்கி வந்தது.

அந்த முன்னாள் ரயில்பாதை இப்போது மலையேறிகள் விரும்பும் பிரபல வழித்தடமாக இருக்கிறது.

புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையம் அருகே அமைந்திருக்கும் புதிய வீட்டுத் திட்டங்களில் உணவகம், பேரங்காடி, பாலர்பள்ளி, குடியிருப்பாளர்கள் கட்டமைப்பு நிலையம் ஆகியவை இருக்கும்.

அக்டோபரில் மொத்தம் 6,800 வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும். காலாங்/வாம்போ, குயீன்ஸ்டவுன், தெங்காவில் இதர திட்ட வீடுகள் எழும்பும்.

சுவா சூ காங் வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும் தேதி வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டின் மூன்றாவது விற்பனை பொதுவாக ஆகஸ்டில்தான் இடம்பெறும், ஆனால் மே மாத பிடிஓ வீட்டு விற்பனையின்போது தாமதம் ஏற்பட்டுவிட்டதால் அக்டோபரில் விற்பனை இடம்பெறுகிறது.

குறிப்புச் சொற்கள்