தொடக்கப்பள்ளி மாணவர்களின் மின்னிலக்கத் திறனை மேம்படுத்த திட்டம்

2 mins read
0771c218-7b5f-49f3-ac45-7cfe4d68717d
உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மின்னிலக்கக் கற்றல் முறையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கப்பள்ளி மாணவர்களின் மின்னிலக்கத் திறனை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறிவது குறித்து கல்வி அமைச்சும் தொடக்கப்பள்ளிகளும் பரிசீலித்து வருகின்றன.

தொடக்கநிலை மாணவர்கள் வளர்ந்து உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் வயதை நெருங்குவதால் இது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மை ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மின்னிலக்கக் கற்றல் முறையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதை அமைச்சு சுட்டியது.

அதுமட்டுமல்லாது, மாணவர்களின் மின்னிலக்கத் திறனை மேம்படுத்த 2030 பெருந்திட்டத்தை அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.

மின்னிலக்கக் கற்றல் முறைக்காகப் பயன்படுத்தப்படும் மடிக்கணினி போன்ற சாதனங்கள் தொடக்கமாணவர்கள் வைத்திருப்பது அவர்களுக்குப் பலனளிக்குமா என்பது குறித்து கண்டறிய 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆய்வு ஒன்றை அமைச்சு நடத்தியது.

இந்த ஆய்வில் சுவா சு காங், ஃபிரான்டியர், ஜுன்யுவான், ரிவர் வேலி, இயோ சு காங் ஆகிய ஐந்து தொடக்கப்பள்ளிகள் பங்கேற்றன.

மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பதால் மாணவர்களின் நடத்தை, கற்றலில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி ஆய்வு அலசி ஆராய்ந்தது.

மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கும்போது மாணவர்களின் செயல்பாடு மேம்பட்டதாக ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பெரியவர்களின் மேற்பார்வை இல்லாவிடில் மாணவர்கள் அந்தச் சாதனங்களில் அளவுக்கு அதிகமான நேரம் செலவிடக்கூடும் என்ற அக்கறை நிலவுகிறது.

இணையம் வழியாக திரைப்படம் பார்ப்பது, விளையாட்டுகளை விளையாடுவது போன்றவை மாணவர்களுக்குக் கவனச் சிதறலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

அதுமட்டுமல்லாது, இணையம் வழி ஏற்படும் பல்வேறு ஆபத்துகளுக்கு அவர்கள் ஆளாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கல்வி கற்றலுக்கு மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தும்போது அவை அவர்களின் வளர்ச்சிக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.

அதைக் கருத்தில் கொண்டு இப்போதைக்கு தொடக்கநிலை மாணவர்களுக்கு மின்னிலக்கச் சாதனங்களை வழங்கப்போவதில்லை என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்