இந்த ஆண்டின் முதல் பாதியில் 14 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. அந்த மரணங்களில் இரண்டு ஊழியர்கள் மாண்ட சம்பவங்களும் அடங்கும். அவர்களில் ஒருவர் ஒரு சுவரை எழுப்பி வந்த ஊழியர். அவர் தலையில் அடிபட்டார்.
மற்றொருவரான இழுவை வாகன ஓட்டுநர் இரும்புக் கதவு நசுங்கி மாண்டார்.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் புதன்கிழமை முதன்முதலாக இந்த இரண்டு வேலையிட மரணங்கள் பற்றி அறிவித்தது.
ஊழியர் ஒருவர் மே 2ஆம் தேதி ஒரு சுவருக்கு அருகே தலையில் அடிபட்டு பாதி சுயநினைவை இழந்த நிலையில் கிடந்தார். அவர் அப்போதுதான் அந்தச் சுவரைக் கட்டி இருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மாண்டுவிட்டார்.
ஜூன் 9ஆம் தேதி கிடங்கு ஒன்றின் நுழைவு வாயிலில் நகரும் இரும்பு கதவு விழுந்து இழுவை வாகன ஓட்டுநர் நசுங்கினார்.
இந்த இரண்டு சம்பவங்கள் பற்றி புலன்விசாரணை நடப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கட்டுமான ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் நிறுவனங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த மன்றம் வலியுறுத்தி இருக்கிறது.

