ஜாலான் புசாரில் புதிதாக, தொலைமருத்துவச் சேவை வழங்கும் தானியக்க முகப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜாலான் புசார் விளையாட்டரங்கில் அது அமைந்துள்ளது.
‘ஸ்மார்ட்ஆர்எக்ஸ்’ நிறுவனமும் ‘நின்காடெக்’ சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் இணைந்து அந்த தொலைமருத்துவச் சேவை முகப்பை நிறுவியுள்ளன.
முகப்பு, இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
முதலாவது, மருத்துவர் பரிந்துரை இல்லாமலே பெறக்கூடிய மருந்துகளை வழங்கும் இயந்திரம். இது 24 மணி நேரமும் சேவை வழங்கும்.
இரண்டாவது, நோயாளிகள் தொலைமருத்துவச் சேவை வழங்கும் மருத்துவரிடம் காணொளி மூலம் ஆலோசனை பெற உதவும் சிற்றறை. மருத்துவர் பரிந்துரையின்பேரில் மட்டுமே பெறக்கூடிய மருந்துகளைப் பெற்றுக்கொள்ள இது உதவுகிறது.
முகப்பில் உள்ள தானியக்க இயந்திரத்தின் மூலம் கிட்டத்தட்ட 75 வகையான மருந்துகளைப் பெற இயலும்.
முகப்பிற்கு அருகே 380, ஜாலான் புசார் எனும் முகவரியில் அமைந்துள்ள வழக்கமான மருந்தகத்தில் விற்கப்படும் அதே விலையில் முகப்பிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், மருந்தகத்தில் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறக் கட்டணம் $40. தொலைமருத்துவ முகப்பில் $27 செலுத்தினால் போதுமானது.
முதல்முறை செல்லும் நோயாளிகள் முகப்பில் தங்கள் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். ரொக்கமற்ற முறையில் கட்டணம் செலுத்திய பிறகு, தொலைமருத்துவச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தனிப்பட்ட சிற்றறையில் பொருத்தப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட தொடுதிரைகள், ஒலிபெருக்கி போன்றவை மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
நோயாளிகளே தங்கள் உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உயரம், எடை போன்றவற்றை அளக்க இயலும்.
இவற்றில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் கண்டறியப்பட்டால் சுகாதார அறிவியல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இதர கருவிகள் மூலம் அதைச் சரிபார்க்க முடியும்.
மருத்துவரின் ஆலோசனை நிறைவடைந்த பிறகு, சிற்றறையில் இருந்து வெளியேறி, தானியக்க இயந்திரத்தின் மூலம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நோயாளியின் பெயர், மருந்தை எடுத்துக்கொள்ளும் முறை குறித்த விவரங்கள் அச்சிடப்பட்ட ஒட்டுவில்லைகளுடன் அந்த மருந்துகள் வழங்கப்படும்.
நோயாளிகள் மருத்துவரைக் காணக் காத்திருக்கும் நேரம் குறைவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும் மருத்துவச் சான்றிதழையும் உடனுக்குடன் பெறவும் இந்த முகப்பு வகைசெய்கிறது.