தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோ சோக் டோங்: சமய, இன நல்லிணக்கம் சிங்கப்பூரின் அரசியல் நிலைத்தன்மைக்கு முக்கிய அம்சம்

2 mins read
9cf0e587-9348-4c23-af6b-d5a735227606
யூதர் நலக் கழகம் (ஜேடபிள்யூபி) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு கோ பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமய நல்லிணக்கம் சிங்கப்பூருக்கான அடையாளத்தின் முக்கிய அங்கம் என்று கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.

சமய நல்லிணக்கம் சாதாரணமாக உருவெடுக்கவில்லை என்றும் அது பலரின் கடின உழைப்பாலும் தொடர் முயற்சிகளாலும் மலர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யூதர் நலக் கழகம் (ஜேடபிள்யூபி) ஏற்பாடு செய்த சுக்கோத் விழாவில் திரு கோ பேசினார். அந்நிகழ்ச்சி வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள ஜேக்கப் பாலாஸ் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சமயங்களுக்கிடையிலான அமைப்பு (ஐஆர்ஓ) தொடங்கி அடுத்த ஆண்டுடன் (2024) 75 ஆண்டுகள் நிறைவடையும். அதைக் கொண்டாடும் வண்ணமும் சுக்கோத் நிகழ்ச்சி நடந்தது.

அனைத்துச் சமய மன்றத்தின் புரவலருமான திரு கோ, அந்த அமைப்பு 1949ஆம் ஆண்டில் அடிமட்டத்திலிருந்து தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார். சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதன் அவசியத்தைப் பல்வேறு சமயங்களின் தலைவர்கள் உணர்ந்ததையடுத்து அமைப்பு உருவாக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிவதாகவும் திரு கோ எடுத்துச்சொன்னார்.

“சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நமது அரசாங்கம் ஆக முக்கிய பங்கை வகித்தது, தொடர்ந்து வகிக்கவும் செய்கிறது,” என்றார் திரு கோ. “சிங்கப்பூருக்கென ஓர் அதிகாரத்துவ சமயம் கிடையாது. அரசாங்கம் எல்லா சமயங்களையும் பாரபட்சமின்றி சமமாக நடத்துகிறது,” என்றும் அவர் சுட்டினார்.

எல்லா சிங்கப்பூரர்களும் தாங்கள் விரும்பும் சமயங்களை விருப்பத்துக்கு ஏற்றவாறு அனுசரிக்க அரசாங்கம் வகைசெய்கிறது என்றும் திரு கோ கூறினார். சட்டங்கள், அரசாங்கக் கொள்கைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசாங்கம் அதைச் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

சமய நல்லிணக்கமும் இன நல்லிணக்கம் சிங்கப்பூரின் தொட்டுணர முடியாத விலைமதிப்பற்ற சொத்துகள் என்றும் அவை நாட்டின் அரசியல் நிலைத்தன்மையின் முக்கிய அம்சங்கள் என்றும் திரு கோ சொன்னார்.

“இன, சமய நல்லிணக்கமின்றி அரசியல் நிலைத்தன்மை இருக்காது. அதேபோல், நியாயமாக நடந்துகொள்ளும் வலுவான அரசாங்கமும் அரசியல் நிலைத்தன்மையும் இல்லாவிட்டால் சமய, இன நல்லிணக்கம் இருக்காது,” என்று திரு கோ விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்