தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாசரஸ் தீவில் புதிய நீர் விளையாட்டு நிலையம்

2 mins read
ea7d35ee-e5de-4a88-9825-f714f2e57121
லாசரஸ் தீவில் கிராமிய மணம் கமழும் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய வசதிகள் திறக்கப்படுவதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லாசரஸ் தீவில் வருகையாளர்களுக்காக சிறிய கடை, நீர் விளையாட்டு நிலையம் உள்ளிட்ட புதிய வசதிகள் திறக்கப்பட்டுள்ளன.

லாசரஸ் நீர் விளையாட்டு நிலையம் அடுத்த வாரத்திலிருந்து சேவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரம் பொருத்தப்படாத விளையாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி வருகையாளர்கள் இங்கு நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம். மிதக்கும் யோகா விரிப்புகள், படகோட்டம் போன்றவை அவற்றில் சில.

லாசரஸ் தீவில் கிராமிய மணம் கமழும் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது நோக்கம் என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம், இத்தீவில் வாடகை சைக்கிள் நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. மேலும், ‘டைனி எஸ்கேப்’ எனப் பெயரிடப்பட்ட ஐந்து சிறுவீடுகள், குறுகிய காலத் தங்குமிடங்களாகத் திறக்கப்பட்டன.

நீர் விளையாட்டுகளால் லாசரஸ் தீவைச் சுற்றியுள்ள பகுதியில் கடற்படுகை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சிறிய கடையில் உணவு, குடிநீர் விற்கப்படுவதால், வருகையாளர்கள் தங்கள் உணவு, பானங்களை எடுத்துச்செல்லத் தேவையில்லை.

அழகிய கடற்புறச் சூழலை ரசிக்க உதவும் வகையில் சொகுசு முகாம்கள் ஒன்பது அமைக்கப்பட்டுள்ளன. அவை இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து சேவை வழங்கும்.

வருகையாளர்கள் நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்க உதவும் விதமாக, ‘டிஸ்கவர் த சதர்ன் ஐலண்ட்ஸ்’ எனும் மின்வழிகாட்டிக் குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அக்குறிப்பேட்டில், வனவிலங்குகளை எதிர்கொள்ளும் முறை, கழிவுகளை அப்புறப்படுத்தும் முறை போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான், புதிய வசதிகளைத் திறந்து வைத்துப் பேசினார்.

பொறுப்புள்ள முறையில் இயற்கை சார்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. லாசரஸ் தீவின் புதிய வசதிகள் அத்தகைய பயணிகளுக்கு அத்தீவைப் பேணிப் பாதுகாக்கும் உணர்வைத் தோற்றுக்குவிக்கும் என்றார் அவர்.

சுற்றுப் பயணிகளுக்கு பசுமையான, ரசனைக்குத் தீனி போடும் இடமாக லாசரஸ் தீவு விளங்க வேண்டும் என்பதே சிங்கப்பூரின் விருப்பம் என்றார் திரு டான்.

குறிப்புச் சொற்கள்