சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை, 0.6 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மறுவிற்பனை வீட்டு விலை குறைந்தது இதுவே முதல்முறை.
செப்டம்பரில் குறைவான எண்ணிக்கையிலேயே வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின.
சொத்துச் சந்தை இணையத்தளங்களான எஸ்ஆர்எக்ஸ், 99.கோ ஆகியவை வெளியிட்டுள்ள முன்னோடி மதிப்பீடுகளில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்புநோக்க, ஒட்டுமொத்த மறுவிற்பனை வீடுகளின் விலை 4.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 2023ல் 1,985 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்பனையாயின. ஆகஸ்ட் மாதத்தைவிட இது 19.7 விழுக்காடு குறைவு.
ஆண்டு அடிப்படையில், செப்டம்பர் மாதம் மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 23.3 விழுக்காடு குறைந்தது.
ஒட்டுமொத்தத்தில் செப்டம்பர் மாதம் மறுவிற்பனை வீட்டுச் சந்தையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதம் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வரவிருப்பதே இதற்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆண்டு அக்டோபரிலும் டிசம்பரிலும் ஏறக்குறைய 13,000 புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படவிருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நிலவும் வீட்டு விலை குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் இதற்கு மற்றொரு காரணம் என்று அவர்கள் கூறினர்.
சீன நாள்காட்டியில், ஆகஸ்ட் மாத நடுப்பகுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான காலகட்டம் ‘ஹங்ரி கோஸ்ட்’ மாதம் என்பதாலும் மறுவிற்பனை வீட்டுச் சந்தை மந்தமாக இருந்திருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டனர்.
மூவறை வீடுகளின் மறுவிற்பனை விலை 0.6 விழுக்காடு கூடிய வேளையில், நான்கறை வீடுகளின் மறுவிற்பனை விலை 0.9 விழுக்காடு குறைவாகவும் ஐந்தறை வீடுகளுக்கு 0.3 விழுக்காடு குறைவாகவும் எக்ஸிகியூட்டிவ் வீடுகளுக்கு 2.1 விழுக்காடு குறைவாகவும் பதிவாயின.
செப்டம்பரில் கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகளில் 45.5 விழுக்காட்டு வீடுகள் நான்கறை வீடுகள். மூவறை, ஐந்தறை மற்றும் எக்ஸிகியூட்டிவ் வீடுகளில் இந்த விகிதம் முறையே 25.6%, 23.1%, 5.8% ஆகும்.
செப்டம்பரில், 42 வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் விற்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் இத்தகைய 54 வீடுகள் கைமாறின.
பீஷானில் ஓர் எக்ஸிகியூட்டிவ் வீடு ஆக அதிகமாக $1.45 மில்லியனுக்குக் கைமாறியது.