ஆசிய நாடுகள் தங்களுடைய சொந்த சமூகங்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
புவிசார் அரசியல் பதற்றங்கள், தன்னைப்பேணித்தனம் அதிகரிப்பு போன்ற சிரமங்களுக்கு இடையே ஆசிய நாடுகள் இதைச் சாதிக்க வேண்டும். அப்போதுதான் அதன் ஆற்றல் கைகூடி வரும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
ஆசிய நாடுகள் சரியான முடிவுகளைச் செய்தால் அமைதி, பாதுகாப்பு, தொடர் செழிப்புக்கான சூழலை உண்டுபண்ண முடியும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை எதிர்காலத்தைக் கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது என்றார் அவர்.
எஸ்பிஎச் மீடியா ஊடகம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் ‘எதிர்கால ஆசிய உச்சநிலை மாநாடு 2023’ என்ற மாநாட்டில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை திரு லீ உரையாற்றினார்.
சிங்கப்பூர் தலைமைத்துவ மாற்றத்திற்கு ஆயத்தமாகி வருகிறது என்று கூறிய அவர், புதிய தலைமைத்துவ அணியினர் சிங்கப்பூரை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முயன்று வருவதாகக் குறிப்பிட்டார்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ என்ற நாடளாவிய பொதுமக்கள் ஈடுபாட்டு இயக்கத்தின் மூலம் இளம் தலைவர்கள் திட்டவட்டமான ஒரு தேசிய நிகழ்ச்சிநிரலை உருவாக்கி வருகிறார்கள்.
மீள்திறன்மிக்க, ஐக்கியமான சிங்கப்பூரைப் பலப்படுத்துவது அதன் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு மட்டுமன்றி, சிங்கப்பூர் தனது ஆசியான், அனைத்துலக பங்காளி நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு ஆழமான வட்டார ஒருங்கிணைப்பையும் பலதரப்பு வர்த்தக ஏற்பாட்டு முறையையும் ஆதரித்து வருகிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அதற்கான சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கும் தோதாக இவை அனைத்தையும் சிங்கப்பூர் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், பிசினஸ் டைம்ஸ் ஆகியவை சேர்ந்து முதல்முறையாக அந்த உச்சநிலை மாநாட்டை நடத்தின. இந்த ஆண்டில் அதற்கு ஓசிபிசி வங்கி பொறுப்பாதரவு அளித்தது.
குக்கோலாண்ட், கிங்ஸ்ஃபோர்ட் குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் அந்த மாநாடு தி ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடந்தது.
மாநாட்டில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
ஆசிய வட்டாரம் துடிதுடிப்பானது. அதிக ஆற்றலைக் கொண்டது என்பதை திரு லீ சுட்டினார்.
இருந்தாலும் அந்த ஆற்றல் கைகூடி வரவேண்டும் என்றால் அதற்குச் சரியான பொருத்தமான சூழல்கள் தேவை என்றும் அவர் கூறினார்.
ஆசியாவின் ஆற்றலுக்கும் செழிப்பிற்கும் உலக, வட்டார நிலைப்பாடு மிக முக்கியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் திரு லீ குவான் இயூவின் உலகளாவிய கண்ணோட்டங்களையும் அந்த மாநாடு விவாதித்தது.
ஆசியா ஒளிவுமறைவு இல்லாத எல்லாரையும் உள்ளடக்கிய நிலையைத் தொடர்ந்து பலப்படுத்தி வரவேண்டும்.
அதன் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பு ஆழமடைய வேண்டும்.
ஆசியாவின் ஒவ்வொரு நாடும் தனது சொந்த உள்நாட்டு சமூக, அரசியல் நிலவரங்களை நிர்வகித்து ஆசியாவின் செழிப்புக்கு உதவக்கூடிய நிலையான சமூகங்களையும் நாடுகளையும் உருவாக்க வேண்டும்.
அதேவேளையில், வட்டார ஒத்துழைப்பைத் தொடரக்கூடிய அரசாங்கங்களும் அமைய வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஆசியா மூன்று பரந்த சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்த திரு லீ, புவிசார் அரசியல் போட்டாபோட்டி அதிகமாகி வருவது அவற்றில் ஒன்று என்றார்.
ஆசியா தனக்கே உரிய சொந்தமான சிரமமான பிரச்சினைகளை வெற்றிகரமான முறையில் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தேசியவாதமும் தன்னைப்பேணித்தனமும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இது மூன்றாவது சவால் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தச் சிரமங்களுக்கு இடையிலும் ஆசியாவின் ஆற்றல் கைகூடி வரவேண்டும் என்றால், உயர்தர விவேகமிக்க தலைமைத்துவமும் பொதுவான நலன்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற வலுவான உறுதியும் தேவை என்று திரு லீ குறிப்பிட்டார்.
எதிர்கால ஆசிய உச்சநிலை மாநாடு 2023ல் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட், சிங்கப்பூருக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜான் ஹன்ஸ்மேன், இன்போசிஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்த நாராயண மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

