தீங்கு நிரல் மூலம் நடந்த மோசடி வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக இருவர் மீது நேற்று குற்றம்சாட்டப்பட்டது.
ஜெர்ரி சுவா ஸென் ஷென், 32, பிங் கோக் வா, 56, ஆகிய இருவர் மீது குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணம் என்று சந்தேகிக்கக்கூடிய காரணம் இருந்தாலும் சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றதாக தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் 2023 ஜூன் முதல் செப்டம்பர் வரையில் பல புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
தீங்கிழைக்கக்கூடிய நிரல்கள் மூலம் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. சிலரது வங்கிக் கணக்கிலிருந்து அவர்களுக்குத் தெரியாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளது. மோசடி மென்பொருள் அல்லது செயலிகள் மூலம் மறைச்சொல்கள் மற்றும் இதர வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட்டுள்ளன.
அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 25,000 வெள்ளி ரொக்கம், 15 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், 34 தங்கக் கட்டிகள், ஏழு தங்க நாணயங்கள், மூன்று மோதிரங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். மேலும் ஐபேட், ஐந்து கைப்பேசிகள், 240,000 வெள்ளி மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே $112,500 ரொக்கமுள்ள ஆறு வங்கிக் கணக்குகள் மேலும் மோசடிக்கு இலக்காகாமல் இருப்பதற்காக முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
முன்பின் அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு மோசடி செயலிகள், போலி இணையத் தளங்கள் ஆகியவற்றில் கவனமுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் 3ஆம் தரப்பு செயலிகளை கைப்பேசியில் நிறுவி வங்கி விவரங்கள் திருடப்படலாம் என்றும் அது கூறியுள்ளது.

