தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$259,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

2 mins read
f3a1d828-50b8-453e-927d-d5d1643bd5bb
பிடோக் நார்த் ஸ்திரீட்டில் அக்டோபர் 5ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் $259,000க்குமேல் மதிப்பிலான ‘ஹெராயின்’ போதைப்பொருள் பிடிபட்டது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து $259,000க்குமேல் மதிப்புடைய ‘ஹெராயின்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை (அக். 7) இதனைத் தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 1,170 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய அளவிலானது என்று அது கூறியது.

வியாழக்கிழமை மாலை, இதன் தொடர்பில் 47 வயது சிங்கப்பூரரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த ஆடவர், பிடோக் நார்த் ஸ்திரீட் 3இல் உள்ள புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில், சிங்கப்பூரரான 57 வயது ஆடவரையும் 31 வயதாகும் வெளிநாட்டுப் பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த வீட்டிலிருந்து மொத்தம் கிட்டத்தட்ட 2,464 கிலோகிராம் எடையுள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருளையும் அதைப் பயன்படுத்துவதற்கான கருவிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் 15 கிராமுக்குமேல் எடையுள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் சேம் டீ, போதைப்பொருள்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

“போதைப்பொருள் அறவே இல்லாத சமூகமாக சிங்கப்பூர் திகழ வேண்டும். அதைச் சகித்துக்கொள்ளும் ஒன்றாக அன்று,” என்றார் அவர்.

சிறிய நாடான சிங்கப்பூரில் சமூக அளவில் போதைப் புழக்கம் பரவினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

பிடோக்கில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் பிடிபட்ட சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்