வாஷிங்டன்: துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமது அமெரிக்கப் பயணத்தின் ஓர் அங்கமாக, வெள்ளிக்கிழமை, அரிசோனா மாநிலத்தில் உள்ள லூக் ஆகாயப்படைத் தளத்திற்கு அவர் சென்றிருந்தார்.
அங்கு பயிற்சிபெறும் சிங்கப்பூர் ஆகாயப்படை வீரர்கள் முன்னிலையில் திரு வோங் உரையாற்றினார்.
“சிங்கப்பூரும் அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. அவற்றில் தற்காப்பும் அடங்கும்,” என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஆக அதிக எண்ணிக்கையில் பயிற்சி பெறும் வெளிநாட்டு ராணுவத்தினரில் சிங்கப்பூர் ராணுவத்தினரும் அடங்குவர் என்பதைத் துணைப் பிரதமர் சுட்டினார்.
“இது இரு நாடுகளும் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கையைக் காட்டுகிறது,” என்றார் அவர்.
இந்தப் பங்காளித்துவத்தை வளர்க்கவும் வலுப்படுத்தவும் விரும்புவதாகத் திரு வோங் சொன்னார்.
லூக் ஆகாயப்படைத் தளத்தில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் பயிற்சித் தளத்தை அவர் பார்வையிட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அங்கு, ‘எஃப்-35’ ரகப் போர் விமானங்களின் திறன் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆகாயப் படையில் அத்தகைய விமானங்கள் சேவையில் இணையும்.
தற்போதுள்ள ‘எஃப்-16’ ரகப் போர் விமானங்களுக்குப் பதிலாக, படிப்படியாக 2030ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் ‘எஃப்-35’ ரகப் போர் விமானங்கள் சிங்கப்பூர் ஆகாயப் படையில் இணைக்கப்படும்.
அரிசோனாவில் பயிற்சி பெறும் சிங்கப்பூர் ஆகாயப் படை வீரர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் துணைப் பிரதமர் வோங் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூரின் ராணுவத் திறனை வலுப்படுத்தவும் நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆகாயப்படை வீரர்கள் ஆற்றும் பங்கிற்கும் அர்ப்பணிப்பிற்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தமது அமெரிக்கப் பயணத்தின் அடுத்த கட்டமாக நியூ யார்க் நகருக்குச் செல்லும் திரு வோங், ‘ஜிஐசி’ முதலீட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்வார்.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் புதிய கிளை ஒன்றை அவர் திறந்து வைப்பார். சிங்கப்பூரின் புதிய நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் விரிவாக்கம் காண அது கைகொடுக்கும்.
பின்னர், வாஷிங்டனில் அமெரிக்க அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் துணைப் பிரதமர் வோங் சந்திப்பார்.
முக்கிய, வளரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான அமெரிக்க-சிங்கப்பூர் முதலாம் கலந்துரையாடலில் அவர் உரையாற்றுவார்.