விடாப்பிடியாக அதிகரிக்கும் வட்டி விகிதம், புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற சூழல்களால் மாறிவரும் உலகில், சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’, புதிய வாய்ப்புகளை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
“நாம் மாறுபட்ட உலகில் தற்போது வசிக்கிறோம். வட்டி விகிதங்கள் நீண்டகாலத்திற்கு அதிகமாகவே இருக்கும்போல் தெரிகிறது.
“தீங்கற்ற உலகமயமாதல் என்ற நிலையிலிருந்து வல்லரசுகளுக்கு இடையிலான போட்டாபோட்டி என்ற நிலைக்கு மாறிக்கொண்டுள்ளோம்,” என்றார் திரு வோங்.
திங்கட்கிழமை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘ஜிஐசி’ முதலீட்டுக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப்பின் முதல்முறையாக அக்கருத்தரங்கு நேரடியாக இடம்பெறுகிறது.
அக்டோபர் 1ஆம் தேதி திரு வோங், ‘ஜிஐசி’யின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரின் அந்நியச் செலாவணிக் கையிருப்புகளை நிர்வகிக்கும் ‘ஜிஐசி’, உலகின் ஆகப் பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.
கருத்தரங்கிற்குப் பிறகு சமூக ஊடகங்களில் திரு வோங், அதுகுறித்துப் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிவேகமாக மாற்றம் காணும் சூழலில், சவால்களைச் சமாளிக்கும் விதமாகவும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றும் விதமாகவும் நம்மை நிலைநிறுத்திக்கொள்வது குறித்தும் ஆலோசிப்பதற்காக ஜிஐசியின் நிர்வாகக் குழு, ஆலோசகர்கள் ஆகியோருடன் நடத்திய சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்.
துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட்டும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
“முன்னணி முதலீட்டாளர்களுடனான சந்திப்பு பலனளிக்கும் விதமாக அமைந்தது. பொருளியல், புவிசார் அரசியல், உள்கட்டமைப்பிலும் நீடித்த நிலைத்தன்மை மிக்க இடங்கள் தொடர்பிலும் உள்ள வாய்ப்புகள் ஆகியவை குறித்த கண்ணோட்டங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்,” என்று திரு ஹெங் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகளாவிய நிலையில் கொந்தளிப்பான சூழல் நிலவும் வேளையில், வாய்ப்புகள் குறித்தும் சவால்கள் குறித்தும் தெளிவாகப் புரிந்துகொள்வது, சிங்கப்பூரின் எதிர்கால நிதி நிலவரத்தைப் பாதுகாக்க ஜிஐசிக்கு உதவும் என்றார் அவர்.
கடந்த ஜூலை மாதம், ஜிஐசி எட்டு ஆண்டுகளில் ஆக அதிக ‘20 ஆண்டுகாலத்திற்கான லாபத்தை’ ஈட்டியது.
உலகளாவிய நிச்சயமற்றதன்மை, கடுமையான பணவீக்கம் ஆகியவை தொடரும் நிலையில் சவால்கள் அதிகமிருந்தாலும் ஜிஐசி அவ்வாறு லாபம் கண்டது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், தமது அமெரிக்கப் பயணத்தின் அடுத்த கட்டமாக நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருக்கிறார். அங்கு அமெரிக்க அமைச்சர்களையும் மூத்த அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், அமெரிக்க ஆய்வுக் கழகங்கள், மூத்த வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது.

