‘ராஃபிள்ஸ் பேண்டட்’ வகை லங்கூர்கள் சிங்கப்பூரில் அருகிவரும் உயிரினமாகக் கருதப்படுகிறது.
தற்போது அத்தகைய கிட்டத்தட்ட 75 லங்கூர்கள் மட்டுமே இங்கு உள்ளன. ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
பெரும்பாலும் மரத்திலேயே வசிக்கும், கூச்ச சுபாவமுடைய இவ்விலங்குகள், சிங்கப்பூரிலும் மலேசியத் தீபகற்பத்தின் தென்பகுதியிலும் மட்டுமே காணப்படும்.
வசிப்பிட அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் இவை 40 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று 1990களில் கணிக்கப்பட்டதாக ‘மண்டாய் நேச்சர்’, ஆக்ஸ்ஃபர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
‘மண்டாய் நேச்சர்’ என்பது மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பிரிவு.
1980களில் சிங்கப்பூரில் இவற்றின் எண்ணிக்கை 10ஆகக் குறைந்தது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த வகை லங்கூர்களை அழிவின் விளிம்பிலிருந்து காக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.


